எதிர்பார்ப்பை புரட்டிப்போட்ட சிஎஸ்கே..! ஏப்ரல் பூல் என கிண்டலடித்த பிராவோ
தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் ஐபிஎல் போட்டி தொடர்பில் வெளியாகி இருந்த அனைத்து கணிப்புகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் முறியடித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் முடிவடைய இருக்கும் நிலையில் முதல் நான்கு இடங்களை எந்த அணிகள் கைப்பற்ற போகின்றன என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
முதல் இடத்திற்கு ஏற்கனவே குஜராத் அணி தகுதி பெற்று விட்ட நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்தை பதிவு செய்துள்ளது.
நிபுணர்களின் கணிப்புகள்
இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான 3 இடத்தை லக்னோ அணி உறுதி செய்துள்ளது.
ஆனால் 4ம் இடத்திற்கான போட்டியில் ஆர்சிபி, மும்பை, மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்னும் வலுவாக போராடி வருகின்றனர்.
ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் போது வெளியான நிபுணர்களின் கணிப்புகளில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடம் வழங்கப்படாமல் இருந்தது.
கிண்டலடித்த பிராவோ
இந்த கணிப்புகளை டேவிட் ஹஸி, ஜாக் காலிஸ், ஆரன் பிஞ்ச், சஞ்சய் மஞ்ரேக்கர் மற்றும் இர்பான் பதான் ஆகிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வெளியிட்டனர்.
இந்நிலையில் இந்த கணிப்புகளை தவிடுபொடியாக்கும் அளவிற்கு சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதற்கிடையில் இந்த கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ, அனைத்து கணிப்புகளும் ஏப்ரல் Fools தினத்தன்று வெளியாகி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
