அமெரிக்க போர் நிறுத்தத்தில் லெபனான்! ஈரான் வகுக்க தொடங்கி நிபந்தனை
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் சேர்க்கப்பட வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
லெபனானுக்கான ஈரானியத் தூதர் முகமது ரேசா ரவூஃப் ஷைபானியுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரக்ச்சி தெரிவித்துள்ளார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் டெலிகிராம் சனலில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்கள்
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தங்களின் அமைதித் திட்டத்தை மீறுவதாக ஈரான் கருதுகிறது. இதன் காரணமாகவே, சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை ஈரான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

போர்நிறுத்தம் என்பது லெபனான் உள்ளிட்ட பிராந்தியப் பகுதிகளுக்கும் பொருந்தும் என்றும், இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஈரான் கூறுகிறது.
ஆனால், வெள்ளை மாளிகையும் ஜனாதிபதி ட்ரம்ப்பும் இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்."லெபனான் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி அல்ல" என்று ட்ரம்ப் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
ஈரானின் நிபந்தனைகள்
இந்த நிலையில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழு சனிக்கிழமை பாகிஸ்தானில் ஈரானியக் குழுவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளது.

ஈரானியத் தரப்பில் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அரக்ச்சி ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், லெபனான் மீதான தாக்குதல்கள் மற்றும் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது போன்ற நிபந்தனைகளை ஈரான் முன்வைத்து வருவதால், இந்தப் பேச்சுவார்த்தை ஒரு இக்கட்டான சூழலிலேயே தொடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |