தகுந்த பதிலடி தரப்படும்! ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல்
இஸ்ரேலில் உள்ள முக்கிய இராணுவ மற்றும் பாதுகாப்பு இலக்குகளை நோக்கி ஈரான் நடத்திய சரமாரியான ஏவுகணை தாக்குதலுக்கு தகுந்த பதிலடி வழங்கப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் காசாவில் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீன போரினை தொடர்ந்து, லெபனானை மையம் கொண்டு இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையேயான போர் ஆரம்பமாகியுள்ளது.
பழி தீர்க்கத் துடிக்கும் ஈரான் - இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்
இந்த போர் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்த நிலையில் லெபனானில் இடம்பெற்ற பேஜர், வாக்கி டாக்கி, சோலார் தகடுகள் வெடிப்பு போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் பதற்றநிலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மேற்படி தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக தெரிவித்து, ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
இதற்கு பழி தீர்க்கும் வகையில், இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியத் தலைவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டது.
இவ்வாறானதொரு நிலையில், காசா மற்றும் லெபனான் மீதான கொடிய தாக்குதல்களுக்கும், ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தலைவர்கள் சமீபத்தில் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, லெபனான் முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்வதால், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலின் உறுதிப்பாடு
அத்துடன், ஈரான் நேற்று நடத்திய தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,
“ ஈரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டது என்பதுடன் அதற்கு உரிய பதிலடி தரப்படும். எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் இஸ்ரேலின் உறுதிப்பாட்டை இரான் புரிந்து கொள்ளவில்லை.
எங்களை யார் தாக்கினாலும் நாங்கள் பதிலடி கொடுப்போம். நாங்களே வகுத்துக் கொண்ட அந்த விதிகளின் கீழ் செயல்பட நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலும், காஸாவில், கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சுமார் 41,638 பேர் உயிரிழந்துள்ளதுடன் 96,460 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேபோன்று, இஸ்ரேலில், கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் குறைந்தது 1,139 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200 க்கும் மேற்பட்ட மக்கள் சிறைபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |