ஹோர்முஸ் நீரிணையில் சிறைப்பிடிக்கப்பட்ட மாபெரும் 2 எண்ணெய் கப்பல்கள்!
ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) தெற்குப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு மாபெரும் எண்ணெய் தாங்கி கப்பல்கள் ஈரானிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க இராணுவத்தின் மறைமுக ஆதரவுடன் அனுமதி மறுக்கப்பட்ட ஆபத்தான கடல்சார் பாதைகள் வழியே இக் கப்பல்கள் தப்பிச் செல்ல முயன்றபோதே இச் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய கடற்படையின் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழிசெலுத்தல் அமைப்பு
அக் கப்பல்கள் தங்களது இருப்பிடத்தைக் காட்டும் ஜி.பி.எஸ் (GPS) மற்றும் ரேடார் வழிசெலுத்தல் அமைப்புகளைப் (Navigation Systems) முழுமையாக முடக்கிவிட்டு தங்களை அடையாளம் காட்டாமல் பயணிக்க முயன்றதாக IRGC தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ஓமான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு கடல்சார் பாதையைப் பயன்படுத்திய அக் கப்பல்கள், ஈரானிய ஆயுதப் படைகளின் வழிகாட்டுதல்களையும் கடல்சார் போக்குவரத்து ஒழுங்குமுறைகளையும் மீறிச் செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய கடற்படை விடுத்த பல தொடர்ச்சியான வானொலி எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் அக் கப்பல்கள் பொருட்படுத்தாது தொடர்ந்து பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானின் எச்சரிக்கை
ஈரானின் எச்சரிக்கையை மீறி அபாயகரமான கடல் பகுதிக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, அக் கப்பல்கள் சில அசம்பாவிதச் சம்பவங்களில் சிக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அச் சம்பவங்கள் குறித்தான மேலதிக விவரங்களை IRGC வெளியிடவில்லை.
இச் சம்பவங்கள் மற்றும் கப்பல்களில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு அப்பகுதியில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்டு வரும் தூண்டுதல் நடவடிக்கைகளும் (US Military Provocations) கப்பல்களின் அலட்சியப் போக்குமே முதன்மைக் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |