சத்தமின்றி பதில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்...அதிகரிக்கும் போர்ப்பதற்றம்!
இஸ்ரேல் ஈரானிடையே போர்ப்பதற்றம் நிலவி வந்த நிலையில் ஈரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கான சத்தம் கேட்டதாக இந்த தாக்குதல் தொடர்பாக விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாகவும் அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் கூறியுள்ளது, இஸ்பஹான் பகுதியில் ஈரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் இராணுவ விமான தளம் உள்ளதாகவும் இவற்றை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
போர் பதற்றம்
எவ்வாறாயினும் தற்போது, இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் அரச தொலைக்காட்சி கூறியுள்ளது.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும், அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்த நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்பட்டது.
இஸ்ரேலின் பதிலடி
இதன்போது, இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தனது சொந்த முடிவை எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்த நிலையில் ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீதான இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமோ என்ற கேள்விகள் உலக அரங்கில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |