காசா, ஈரானை தொடர்ந்து... இன்னொரு எல்லை நாடுடன் போர் தொடுக்க தயாராகும் இஸ்ரேல்!
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலிற்கும் இடையே ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லையில் கடந்த ஒக்டோபர் 7ம் திகதியன்று திடீர் தாக்குதலை முன்னெடுத்த நிலையில், நாட்டின் வடக்கில் இருந்து இஸ்ரேலியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதன் பின்னர் லெபனானில் ஹிஸ்புல்லாவுடன் முழு அளவிலான போர் வெடிக்கும் என்பதில் இனி எந்த சந்தேகமும் இல்லை என்றே இப்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பிராந்திய மோதல்
எல்லையில் வசிக்கும் இஸ்ரேலிய மக்களும் ஆயுதங்களுடன் ஹிஸ்புல்லா முன்னெடுக்கும் தாக்குதலை எதிர்பார்த்தே உள்ளனர். இஸ்ரேலின் வான்பாதுகாப்பு என்பது 2011 முதல் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவே இருந்துள்ளது.
ஆனால் ஒக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் அந்த நம்பிக்கையும் பெரும்பாலான மக்களிடம் இல்லை என்றே கூறப்படுகிறது. காசா மீது பதிலடித் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்த முதல் நாள், ஹிஸ்புல்லா மீது ஒரு தடுப்பு தரைவழித் தாக்குதலைத் தொடங்க வேண்டும் என்று இஸ்ரேல் முடிவு செய்திருந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதனை நிராகரித்திருந்தார்.
அப்படியான சூழல் பிராந்திய மோதலைத் தூண்டக்கூடியது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், நாளுக்கு நாள் மிகவும் ஆபத்தானதாகவும் மாறியுள்ளது.
அறுவடைகள் சேதம்
இந்நிலையில், தற்போது வடக்கு இஸ்ரேலில் வசிக்கும் சுமார் 60,000 பேருக்கு வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது, அதுமாத்திரமன்றி மேலும் 20,000 பேர் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேறியுள்ளதுடன், அறுவடைகள் சேதமடைந்து வணிகங்களும் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது.
வெறிச்சோடிய தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் களைகள் உயரமாக வளர்ந்துள்ளதாகவும், லெபனானின் எல்லையில், சுமார் 100,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே முன்னும் பின்னுமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் 11 பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் 71 லெபனான் குடிமக்கள் மற்றும் ஹிஸ்புல்லா உட்பட பிற பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 500 போராளிகளும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
2006 கோடையில் 34 நாட்கள் நடந்த கடைசி லெபனான் போரை விட லெபனானில் தற்போது அதிகமான போராளிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |