காசா மீது அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் : ராணுவ நடவடிக்கைகள் தீவிரம்
காசா (Gaza) மீதான தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் (Israel) தயாராகி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் - பலஸ்தீனத்தின் காசா முனைப் பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் (Hamas) அமைப்புக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
பலஸ்தீனத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காசாவில் மிகப்பெரிய பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இஸ்ரேல் தொடர் தாக்குதல்
கடந்த 2023ல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டிற்குள் புகுந்து தொடர் தாக்குதல் நடத்தியதுடன், 200க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது.
பதிலுக்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஒன்றரை ஆண்டுகளாக இந்த போர் நீடித்து வரும் நிலையில், கடந்த ஜனவரியில், 42 நாட்களுக்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அது முடிந்தபின், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பல்வேறு நிபந்தனைகள் விதித்தது. ஹமாஸ் அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
தீவிர இராணுவ நடவடிக்கை
இந்நிலையில், காசாவின் கணிசமான பகுதிகள் மீது உடனடி மற்றும் தீவிர இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஃபா மற்றும் கான் யூனிஸ் ஆகிய முக்கிய நகரங்களை திறம்பட பிரிக்கும் வகையில், தெற்கு காசாவில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள "பாதுகாப்பு மண்டலத்தை" தாங்கள் பாதுகாத்து விட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) உறுதியளிக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதே நேரத்தில், கான் யூனிஸ் மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு வெளியேற்ற உத்தரவுகளை IDF பிறப்பித்துள்ளது.
இரண்டு மாத போர் நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, மார்ச் 18 ஆம் திகதி ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் மீண்டும் தொடங்கியது.
அப்போதிருந்து, IDF காசாவின் குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கட்டுப்படுத்தியுள்ளது, இது நூறாயிரக்கணக்கான காசா குடியிருப்பாளர்களை மீண்டும் இடம்பெயர்வு செய்ய வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
