27 பிரான்ஸ் எம்பிக்களின் விசாக்கள் திடீர் ரத்து : இஸ்ரேல் அதிரடி
27 பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாக்களை இஸ்ரேல் அரசு திடீரென ரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெருசலேமிலுள்ள பிரெஞ்சு தூதரகம், பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேருக்கு இஸ்ரேல் வர அழைப்பு விடுத்திருந்தது.
இந்தநிலையில், அவர்களுடைய பயணம் 21 ஆம் திகதி ஆரம்பிக்க இருந்த நிலையில் இஸ்ரேல் அரசு திடீரென அவர்கள் 27 பேருடைய விசாக்களையும் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ஒத்துழைப்பு
சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அமைதிக் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதே தங்கள் இஸ்ரேல் பயணத்தின் நோக்கம் என 27 பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அந்த குழு தெரிவித்துள்ளது.
ஆனால், இஸ்ரேல் அரசுக்கு எதிராக செயல்படக்கூடும் என கருதப்படுவோருக்கு இஸ்ரேல் அதிகாரிகள் தடை விதிக்கலாம் என்னும் சட்டத்தின் கீழ் அந்த 27 பேரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் விரைவில் அங்கீகரிக்கலாம் என கூறியுள்ள விடயம் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் விரிசலை உருவாக்கியுள்ள நிலையில், இஸ்ரேல் அரசு இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
