இஸ்ரேலுக்கான இலவச விசா திட்டத்தை ரத்து செய்ய அநுர அரசுக்கு அழுத்தம்
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை ரத்து செய்யுமாறு கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர், ஒரு நட்பு நாட்டின் இனப்படுகொலைக்கு உதவியதற்காகவும், உடந்தையாக இருந்ததற்காகவும் வரலாற்றின் குப்பை மேட்டில் வீசப்படுவதைத் தவிர்க்க, இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட இலவச விசா சலுகையை திரும்பப் பெறுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு வருகை தர இலவச விசாவிற்கு தகுதியான நாடுகளில் பாலஸ்தீனத்தையும் சேர்க்குமாறு வலியுறுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஹ்மான் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
போர்க் குற்றவாளிகள்
குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “விசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய வழங்கப்பட்ட 40 நாடுகளில் இஸ்ரேலையும் சேர்க்க அரசாங்கம் எடுத்த வெட்கக்கேடான முடிவை அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.
இது போர்க் குற்றவாளிகள் நமது தாய்நாட்டிற்குள் நுழையவும், சட்டத்திலிருந்து தப்பிக்கவும் அனுமதிக்கிறது. விசா இல்லாமல் இலங்கைக்குள் நுழையக்கூடிய நாடுகளில் பாலஸ்தீனம் இல்லை என்பது மேலும் கவலையளிக்கிறது.
சுதந்திர பாலஸ்தீனத்தை தொடர்ந்து ஆதரித்து வரும் ஒரு நாட்டின் தலைமையிடமிருந்து இது எதிர்பார்க்கப்படுவதில்லை.
இஸ்ரேலிய ஆயுதங்கள்
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போருக்கு ஐ.நா உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் இஸ்ரேல் கண்டனம் செய்யப்பட்ட நாடு.
பட்டினி, மருந்துகள் மறுப்பு மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவை இஸ்ரேலிய ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள ஆயுதங்கள்.
இந்த கடிதத்தை எழுதும் நேரத்தில், இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து பசியால் இறந்த பாலஸ்தீனியர்களின் மொத்த எண்ணிக்கை 127. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். ” என அவர் தனது கடித்தை மேலும் தொடர்ந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
