காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் விமான தாக்குதல் : ஐ.நா பணியாளர்கள் பலி
மத்திய காசாவில்(central gaza) உள்ள பாடசாலை மீது இஸ்ரேல்(israel) நடத்திய விமான தாக்குதலில் தமது ஆறு ஊழியர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. முகவரைப்பு (Unrwa)தெரிவித்துள்ளது.
பலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-ஜௌனி பாடசாலை மீது புதன்கிழமை நடந்த தாக்குதலில் மொத்தம் 18 பேர் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு
பாடசாலையிலிருந்து தாக்குதல்களைத் திட்டமிடும் "பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதலை" நடத்தியதாகவும், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.
ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்(António Guterres )இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்ததுடன், "காசாவில் நடப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார்.
"சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் இந்த வியத்தகு மீறல்கள் இப்போது நிறுத்தப்பட வேண்டும்," என்று அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டார்.
ஊழியர்கள் அதிகளவில் உயிரிழந்த சம்பவம்
ஒக்டோபரில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து "ஒரே சம்பவத்தில் தமது ஊழியர்கள் அதிகளவில் உயிரிழந்த சம்பவம் இதுவென ஐ.நா. முகவரைப்பு (Unrwa)தெரிவித்துள்ளது.
கடந்த 11 மாதங்களில் பாடசாலை தாக்கப்படுவது இது ஐந்தாவது முறையாகும் என்றும் அது குறிப்பிட்டது.
ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானன்(Danny Danon), ஐ.நா பொதுச் செயலாளர் குட்டெரஸின் விமர்சனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "பயங்கரவாதிகளுக்கு எதிரான நியாயமான போரில் இஸ்ரேலை ஐ.நா. தொடர்ந்து கண்டிக்கிறது, அதே நேரத்தில் ஹமாஸ் (hamas)அமைப்பு பெண்களையும் குழந்தைகளையும் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதை தொடர்கிறது," என்று அவர் கூறினார்.
எனினும் இராணுவ நோக்கங்களுக்காக பாடசாலைகள் மற்றும் பிற சிவிலியன் தளங்களைப் பயன்படுத்துவதை ஹமாஸ் அமைப்பு மறுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |