அரச சேவையில் நிலவும் சம்பள, ஓய்வூதிய முரண்பாடுகள் : கொழும்பில் கூடிய ஆணைக்குழு!
அரச சேவையில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட சம்பள மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் முதலாவது அமர்வு இடம்பெற்றுள்ளது.
கொழும்பு நாரஹேன்பிட்டி ‘நிலமெதுர’ வளாகத்தில் ஆணைக்குழுவின் தலைவர் தெல்கே அசோக பீரிஸ் தலைமையில் ஏனைய உறுப்பினர்களின் பங்கேற்புடன் முதலாவது உத்தியோகபூர்வ அமர்வு நேற்று (02) நடைபெற்றது.
கடந்த ஜூன் 22ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக 15 உறுப்பினர்களைக் கொண்ட புதிய ஆணைக்குழுவை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரச சேவையில் நீண்டகாலமாக நிலவி வரும் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கண்டு அரச அதிகாரிகளினதும் ஓய்வூதியதாரர்களினதும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்குவதே இந்த ஆணைக்குழுவை நிறுவியதன் நோக்கமாகும்.

அத்துடன், அரச ஊழியர்களின் தொழில்முறைத் தகைமை மற்றும் தொழில்முறை மதிப்பை விருத்தி செய்வதும், புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களுக்கு ஏற்ப பொதுச் சேவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு சீர்திருத்தங்களை கண்டறிந்து அதற்கான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதும் இதன் மூலம் மேற்கொள்ளப்படும்.
இந்த நடவடிக்கையின் மூலம் அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகளுக்கும் ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்