தீர்ப்பை எழுத தயாராகிவிட்ட தமிழ் மக்கள் : யார் மீது ஒழுக்காற்று நடவடிக்கை
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சியில் போட்டியிடுபவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரனை பிரசாரத்துக்கு பயன்படுத்தினால் கட்சியின் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணொலி பதிவொன்றில் தெரிவித்திருந்தார்.
அவர் இவ்வாறு கூற காரணம் அரியநேத்திரன் கட்சி கட்டுப்பாட்டை மீறிவிட்டார் என்றும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தமைதான்.
அப்படி என்ன கட்சி கட்டுப்பாட்டை அரியநேத்திரன் மீறிவிட்டார்.
சட்டத்தால் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை இன்றும் மனங்களால் நாம் ஒன்றாகவே நிற்கின்றோம் என மக்களின் வாக்களிப்பின் மூலம் சர்வதேசத்திற்கு பறைச்சாற்றிய அரியநேத்திரன் துரோகியா?
அப்படியொன்றால் தமிழ் தேசியத்திற்காக துணிந்து நின்ற அரியநேத்திரனுக்காக வாக்களித்த அந்த இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களும் தீண்டத்தகாதவர்களா?
கட்சிக்கட்டுப்பாடு...! அப்படி ஒன்று உள்ளதா தமிழரசுக்கட்சியில். அதுதான் நீதிமன்ற வாசல்வரை வந்து இன்று எந்த தலைமையும் இல்லாமல் சந்தி சிரிக்க வைத்துள்ளவர்கள் தமிழ் மக்களின் விமோசகர்களாம்.
சரி அரியநேத்திரன் கட்சிக்கட்டுப்பாட்டை மீறினார். எதற்கு மீறினார் தமிழ் மக்களை ஒன்றுதிரட்டுவதற்காக மீறினார்.
அப்படியென்றால் பொதுவேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரனுக்கு பகிரங்க ஆதரவை வழங்கி இன்று தமிழரசுக்கட்சியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சிறீதரனுக்கு எதிராக ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை பாயவில்லை என்று சிலர் முணுமுணுக்கின்றனர்.
தமிழ் தேசியத்திற்காக நின்ற அரியநேத்திரனுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எங்கோ இருக்கிற சிங்கள வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி அவரிடமிருந்து எந்த உத்தரவாதத்தையும் பெற்றுக்கொள்ளாமல் அவருக்கு வாக்களியுங்கள் என்று கூறுபவர்கள் தமக்கு தாமே நல்லவர்கள் என காட்ட முயல்வதை தமிழ் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்
எதற்கும் வரும் 14 ஆம் திகதி அவர்கள் தமது தீர்ப்பை எழுதுவார்கள்...