முன்னாள் அரசியல் தரப்புகளுக்கு அரசாங்கத்தின் இறுதி அறிவிப்பு
முன்னாள் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஏனை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் அமைப்புகளுக்கும் பாதுகாப்பு அமைச்சு இறுதி அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன் போது, பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினராலும் இராணுவத்தினராலும் வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த தரப்பினரிடம் பாதுகாப்புக்காக சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட கணிசமான எண்ணிக்கையிலான கைத்துப்பாக்கிகள், ரிவோல்வர்கள் மற்றும் தோட்டாக்கள் இருப்பதை அமைச்சு அவதானித்துள்ளது.
விசாரணை ஆதரவு
மேலும், இந்த வழங்கப்பட்ட துப்பாக்கிகளை வழங்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியல் இலங்கை காவல்துறையிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குறித்து விசாரித்து துப்பாக்கிகளை காவல்துறை காவலில் எடுக்க அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக சிறிலங்கா காவல்துறையால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு ஆதரவை வழங்குமாறும், ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் ஏற்கனவே துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் கையளித்திருந்தால், இதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் காவல்துறை அதிகாரிகளிடம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |