சபையில் சிறிநேசன் எம்.பி. அஞ்சலி: உரிமைகளுக்காக போராடி உயிரை ஈகை செய்த மாமறவர்
புதிய இணைப்பு
மாவீரர் வாரத்தையொட்டி இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.சிறிநேசன் சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது சிறிநேசன் எம்.பி. தெரிவிக்கையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் போராடி தமது உயிரை ஈகை செய்த மாமறவர்களுக்கு இந்த இடத்தில் அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றேன் என்றார்.
முதலாம் இணைப்பு
சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைப்பவர்களை சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்து, காவல் நிலையப் பொறுப்பதிகாரி கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இதன்போது, சாவகச்சேரி நகரப் பகுதியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து வரும் சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உபதவிசாளர் ஞா. கிஷோரும் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.
கலந்துரையாடலின்போது, மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு காவல்துறையினரால் எவ்வித இடையூறுகளும் ஏற்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தடைசெய்யப்பட்ட சின்னங்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தக்கூடாது எனவும், நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியதாக ஞா. கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, கடந்த காலங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வந்ததை காவல் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |