யாழில் 33 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள்: கண்டுகொள்ளாத உயர் அதிகாரிகள்
யாழில் உள்ள 33 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் திருத்தம் செய்வது தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ரணில் விக்ரமசிங்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது, 33 பாதுகாப்பு அற்ற கடவைகளையும் பாதுகாப்பான கடவைகளாக மாற்றம் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது இந்த வருடத்திற்குள் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் , தொடருந்து திணைக்களத்திடம் மதிப்பீட்டு அறிக்கைகளும் அதிபரினால் கோரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
33 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள்
இந்நிலையில், ஒரு மாத காலம் கடந்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இவ்வாறான பாதுகாப்பற்ற தொடருந்து கடவையினால் அதிகளவிலான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
மேலும், கடந்த வாரம் இணுவில் பகுதியில் வான் ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் வானில் பயணித்த மூன்று மாத குழந்தையும் , தந்தையும் உயிரிழந்த நிலையில் தாய் படுகாயமடைந்து யாழ், போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்தினை அடுத்து இரண்டு நாட்கள் ஊர் மக்கள் தொடருந்தை தடுத்து நிறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |