அதிரடியாக மாற்றப்பட்ட யாழ் கலாசார மையத்தின் பெயர்
கடந்த சில நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த யாழ் கலாசார மையத்தின் பெயர் "யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் " என தற்போது மாற்றப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் போது திருவள்ளுவர் கலாசார மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
மீண்டும் பெயர் மாற்றம்
இது குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) யாழ் கலாசார மையத்தின் பெயர் மாற்றப்பட்ட பின்னணியில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இருக்குமோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் இந்த விடயம் குறித்து யாழிலுள்ள இந்திய துணை தூதுவர் சாய்முரளியைச் சந்தித்து தமிழரசுக் கட்சி சார்பில் கடிதமொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம்
மேலும், யாழ் கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டமையானது மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் (P. Ayngaranesan) தெரிவித்திருந்தார்.
இதேவேளை யாழ் கலாசார மைய பெயர்ப்பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து, தமிழ் மொழிக்கு ஏன் ஒரு தாழ்ந்த நிலை என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இவ்வாறு பல கண்டனங்களுக்கு பின்னர் “யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |