தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை...! ரவிகரன் எம்.பி பகிரங்கம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் இருக்கவில்லையெனவும், கடற்புலிகளின் தளபதி வடக்கு, கிழக்கு கடற்பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தற்போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலால் தாயகப்பரப்பிலுள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 12.12.2025 இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிற்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கவனயீர்ப்புப் போராட்டம்
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் இன்று மிகப் பாரிய ஒரு கவனயீர்ப்புப் போராட்டமொன்று கடற்றொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரதிற்காக கையேந்தி நிற்கும் நிலையினை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது. இந்திய இழுவைப்படகுகளின் அட்டகாசமான செயற்பாடுகள் தொடர்கின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகள் இல்லாமல் கடற்பரப்பை தனது பூரண கட்டுப்பாட்டில் நேர்த்தியாக வைத்திருந்தார்.
அந்தவகையில் விடுதலைப் புலிகளின் காலத்தில் வட பகுதி கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தினைப் பூர்த்தி செய்யக் கூடியவகையில் தமது கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொண்டுவந்தனர்.
இழுவைப்படகுகளின் அத்துமீறல்
ஆனால் தற்போது இந்திய இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறல்களுக்கு எதிராகவும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிராகவும் நாடாளுமன்றில் தொடற்சியாக நான் குரல் கொடுத்துவருகின்றேன்.

குறிப்பாக ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டங்கள், நாடாளுமன்றில் உரையாற்றுதல், நாடாளுமன்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் அமைச்சரிடம் கேள்வி எழுப்புவது என பலவளிகளிலும் நான் இந்த இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடு மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றேன்.
அதேவேளை இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்துக் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களிலும், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளால் எமது மீனவமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவருவதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுமிருக்கின்றேன்.
அரசாங்கம் எதனையும் வழங்கத் தேவையில்லை
அந்தவகையில் இந்திய உயர்ஸ்தானிகரும் அதனை ஏற்றுக்கொண்டதுடன், படிப்படியாக இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுமெனவும், அதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்திருந்தார். வட மாகாணத்தைப் பொறுத்த வரையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், களிநொச்சி நான்கு மாவட்டங்களிலும் வாழும் எமது மீனவக் குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தினைக் கொண்டுசெல்வதில் பல்வேறு இடர்பாடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறான தொரு இக்கட்டான நிலையிலேயே கடற்றொழிலாளர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒழுங்கான முறையிலே இந்த கடற்றொழிலாளர்களுடைய கடற்றொழில் செயற்பாட்டை இந்த அரசாங்கம் பாதுகாக்கவேண்டும்.
இந்திய இழுவைப்படகுகளும், தென்னிலங்கையைச் சேர்ந்த சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத தொழில் செயற்பாடுகளும் நிறுத்தப்படுமெனில் எமது கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் எதனையும் வழங்கத் தேவையில்லை. எமது கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தினைத் தாமே மேம்படுத்திக்கொள்வார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து யாழ்மாவட்ட செயலாளரையும் நேரில் சந்தித்து அவருக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளேன். வடபகுதி கடற்றொழிலாளர்கள் படும் துன்பங்களை முற்று முழுதாக நான் அறிவேன்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு மற்றும், நாயாற்றைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களும் 11.12.2025 அன்று இரவு எனக்கு தொலைபேசி அழைப்பெடுத்து இந்திய கடற்றொழிலாளர்கள் அத்து மீறி எமது கடற்பரப்பினுள் நுழைந்து சட்டவிரோதமான முறையில் கடற்தொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக என்னிடம் மிகுந்த வேதனையுடன் முறையிட்டனர்.
உடனடியாகத் தீர்வு காண வேண்டும்
இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகளால் எமது கடல் வளங்கள் அபகரிக்கப்படுவதால், எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்படுவதுடன், மீனவக்குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளும் பாதிக்கின்றன. இவ்வாறு எல்லைதாண்டி வந்து அத்துமீறலில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை இந்த அரசாங்கத்தினால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை.

இவ்வாறு அத்துமீறல் செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறியதனாலேயே எமது கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப் படகுகளையும், வலைகளையும் காட்சிப்பொருட்களாக வைத்துக் கொண்டு இங்கு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை எழுந்துள்ளது.
எனவே எமது கடற்றொழிலாளர்களின் பாதிப்பு நிலையுணர்ந்து இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தொடர்ந்தும் இந்த விவகாரத்தில் இந்த அரசு மெத்தனப் போக்குடன் செயற்படக்கூடாது.
இலங்கை மற்றும் இந்திய அரசுகள் முறையான விதத்தில் அணுகி இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். வடக்கு கடற்றொழிலாளர்கள் மாத்திரமல்ல கிழக்கு கடற்றொழிலாளர்களும் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகின்ற நிலைகள் காணப்படுகின்றன. ஆகவே எமது கடற்றொழிலாளர்களை வாழவிடுங்கள் என்றுதான் கேட்கின்றோம்.
ஏன் எமது கடற்றொழிலாளர்களை நோகடிக்கின்றீர்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே நொந்து போயிருக்கின்ற எமது மீனவமக்களை மேலும் மேலும் நோகடிக்கின்றீர்கள். இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து எமது கடற்றொழிலாளர்களை நிம்மதியாக வாழவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |