யாழ். சுற்றுலாவிகளின் வருகையை அதிகரிக்கச் செய்த இந்திய தொடர்பு
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான நீண்ட பயண நேரம் சுற்றுலாவிகளுக்குச் சவாலாக உள்ளது என்றும்,எனினும், இந்தியாவுடனான நேரடி வான் மற்றும் கடல்வழித் தொடர்புகள் சுற்றுலாவிகளின் வருகையை அதிகரிக்கச் செய்துள்ளது எனவும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (19.01.2026) மாலை நடைபெற்ற கலந்துரையாடலில் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
உலக வங்கி
“எதிர்காலத்தில் அதிகரிக்கவுள்ள சுற்றுலாவிகளைக் கருத்தில் கொண்டும், எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டைக் கருத்தில் கொண்டும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

எமது மாகாணத்தின் மூலப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் முடிவுப் பொருட்களாக இங்கேயே விற்பனைக்கு வரும் நிலை மாற்றப்பட வேண்டும்.
இங்கேயே அவற்றைப் பெறுமதிசேர் பொருட்களாக மாற்றுவதற்குரிய பொறிமுறைகள் அவசியம்.
உலக வங்கியின் 'புத்துயிர்' (REVIVE) திட்டத்தின் முதல் கட்டத்தில் யாழ். மாவட்டம் மட்டுமே உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களும் அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளன.
எனவே, ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி எமது பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்த நாம் விரும்புகின்றோம்” என ஆளுநர் வலியுறுத்தினார்.
நகர்ப்புறங்களை இணைக்கும் திட்டம்
இதன்போது மாவட்டச் செயலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் வழங்கிய அதிகாரிகள்,
“வடக்கு மாகாணத்திலிருந்து நியாயப்பாடுகளுடன் கூடிய சிறந்த திட்டங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில், முன்னுரிமை அடிப்படையில் உலக வங்கித் திட்டங்களை மாற்றியமைக்க முடியும்.

எனினும், இவை கடன் நிதிகள் என்பதால், முதலீட்டுக்குரிய நற்பேறுகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
தேவைப்பாடுகளை சரியாக அடையாளம் கண்டு மிகச் சிறந்த திட்டங்களை முன்வைக்கும்போது அரசாங்கத்தால் கூட நிதி வழங்க முடியும், எனக் குறிப்பிட்டனர்.
மேலும், கிராமிய மற்றும் நகர்ப்புறங்களை இணைக்கும் 'ரூபன்' (RURBAN) திட்டம் மற்றும் விவசாயத் துறைசார் திட்டமிடல்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கடந்த கால வெளிநாட்டு நிதித் திட்டங்களின் அனுபவங்களைக் கொண்டு, இனிவரும் திட்டங்கள் மாகாணத் தேவைகளைச் சரியாக அடையாளப்படுத்தி முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது என தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

