அதிகரிக்கும் நெருக்கடி! முடங்குகின்றதா யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம்
நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போதும் தமிழ் இளைஞர்கள் 16 பேர் உட்பட 30 வரையானோர் பணியாற்றுவதால் அவர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகளை வழங்கும் சிரமம் காரணமாகவே விமான நிலையத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், விமான நிலையம் மூடப்படுவதாக அரசாங்கத் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகம் நன்மையடைந்த வடபகுதி மக்கள்
கொரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டன குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இந்த விமான நிலையம் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டு 5 மாதங்களுக்கு சிறப்பாக இயங்கி வந்தது.
குறித்த விமான சேவையால் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்தவர்களே கூடுதலாக நன்மையடைந்திருந்தனர்.
இந்தியாவிற்குச் செல்லும் பயணிகள் கொழும்பு சென்று அங்கிருந்தே இந்தியாவிற்குச் செல்லும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடியாக இந்தியா செல்வதற்கான வாய்ப்பு குறித்த காலப் பகுதியில் காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது விமான நிலையத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை வடக்கு மக்கள் மத்தியில் கவலையைத் தோற்றுவித்துள்ளது.
