மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் சட்டவிரோதமானது : எழுந்துள்ள சர்ச்சை
யாழ்ப்பாணம் - மண்டைதீவில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத் திட்டம் தொடர்பில் இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) கடிதம் அனுப்பியுள்ளது.
அத்துடன் குறித்த கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகம் சட்டவிரோதமானது எனவும் ,இது அத்தீவின் சூழலியல் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் அந்த சங்கம் எச்சரித்துள்ளது.
இத்திட்டம் அமையவுள்ள பகுதியில் கண்டல் தாவரங்கள், கடல் புற்கள், உப்பளங்கள் மற்றும் மண்டைதீவு வனச்சரகம் போன்ற முக்கியமான சூழலியல் மண்டலங்கள் இருப்பதாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம்
மேலும் அந்தக் கடிதத்தில், “கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ சட்டத்தின் கீழ் தேவையான எவ்வித சட்டபூர்வ அனுமதிகளையும் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) பெறவில்லை என அந்தச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

மண்டைதீவு ஒரு இயற்கை வெள்ளத் தடுப்பு வலயமாகும். மழைக்காலங்களில் இப்பகுதி நீரில் மூழ்கும் வாய்ப்புள்ளதால், இங்கு பாரிய கட்டுமானங்களை மேற்கொள்வது நிதி விரயத்திற்கும் தொடர்ச்சியான பராமரிப்பு செலவுகளுக்கும் வழிவகுக்கும்.
அதிகாரிகளுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ள குறித்த சங்கம், இது இலங்கையின் நிலையான அபிவிருத்திக் கொள்கைக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது.
விசாரணை நடத்துமாறு கோரிக்கை
அத்துடன் எங்கள் எதிர்ப்பு யாழ்ப்பாணத்தில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு எதிரானது அல்ல மாறாக, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டைதீவில் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும், சுற்றுச்சூழல் சட்டங்கள் மீறப்படுவதற்கும் மட்டுமே" என அந்த சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தநிலையில் இத்திட்டத்தை உடனடியாக நிறுத்தி இது குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |