புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்…
வரலாறு முழுவதும் ஈழ நிலம் முழுவதும் இடப்பெயர்வின் தழும்புகள்தான். கடலில் வாழும் மீனை இடம்பெயரச் செய்து தரையில் தூக்கி எறிகையில் அது அழிக்கப்படுகிறது.மண்ணில் முளைக்கும் செடியைப் பிடுங்கி எறிகையில் அது உயிர் நீத்து விடுகிறது.
அப்படித்தான் இடப்பெயர்வு என்பது மனித சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு விபரித்துச் செல்ல முடியாத ஒரு நீண்ட துயரப்படலாம். உலகில் கொடும் போரினால் பேரிடப்பெயர்வுகளுக்கு உள்ளான சனங்கள் ஈழத் தமிழ் மக்கள்.
நிலத்தின் உரிமை மறுக்கப்பட்ட மெல்ல மெல்ல அழிக்கப்படுகையில் அதற்கெதிராய் போராடிய ஈழத் தமிழ் மக்கள் அந்த நிலத்தில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டார்கள்.
அனைத்துலக புலம்பெயர்ந்தோர் நாள்
உலகம் இன்று ஒரு சிறிய கிராமமாக மாறிவிட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் சிறந்த வாழ்க்கைச் சூழல் தேடி மக்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இடம்பெயர்வது காலத்தின் தேவையாக உள்ளது.
உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 ஆம் திகதி ‘அனைத்துலக புலம்பெயர்ந்தோர் நாள்’ அனுஷ்டிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, 1990-ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் நாளன்று "அனைத்துப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையை" ஏற்றுக்கொண்டது.
இதன் நினைவாக, 2000 ஆம் ஆண்டு, ஐநா சபை டிசம்பர் 18 ஆம் நாளை அனைத்துலக புலம்பெயர்ந்தோர் நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஏன் இந்தப் புலம்பெயர்வு?
மக்கள் பல்வேறு காரணங்களுக்காகத் தங்கள் தாய்நாட்டை விட்டு புலம்பெயர்கின்றனர். வறுமை மற்றும் சிறந்த ஊதியம் தரும் வேலைவாய்ப்புகளைத் தேடி இடம்பெயர்வது பொருளாதாரக் காரணங்களாகும். இவர்களைப் பொருளாதாரப் புலம்பெயர்வாளர்கள் என்பார்கள்.
அத்துடன் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காகவும் பலர் முன்னேறிய நாடுகளுக்கும் புலம்பெயர்கின்றனர். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் வாழ்வாதார இழப்பு காரணமாகவும் மக்கள் இடம்பெயர்கின்றனர்.
பாதுகாப்புப் கருதி உள்நாட்டுப் போர், அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் மதக் கலவரங்கள் காரணமாகப் பலர் அண்டைய நாடுகளில் தூர தேசங்களில் அடைக்கலம் புகுகின்றனர்.
உலகில் அதிகளவில் போர், ஒடுக்குமுறை மற்றும் அரசியல் காரணங்களால் மக்கள் இடம்பெயர்கின்றனர் என்பது மிக முக்கியமான கருத்தாகும்.
இலங்கையிலிருந்து பல இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலைப் போரினால் உலகின் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். தமிழர்கள் இல்லாத நாடே உலகில் இல்லை எனலாம்.
புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பும் சவால்களும்
புலம்பெயர்ந்த மக்கள் தாங்கள் செல்லும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். அவர்கள் புதிய தொழில்நுட்பங்கள், கலாச்சாரப் பரிமாற்றங்கள் மற்றும் உழைப்பை அந்த நாடுகளுக்கு வழங்குகின்றனர்.
அதே சமயம், அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணம், அந்த நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்தோர் மூலம் கிடைக்கும் வருவாய் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
புலம்பெயர்ந்தோர் பல நேரங்களில் விளிம்புநிலை மக்களாகவே வாழ்கின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாக பாகுபாட்டை எதிர்கொள்வதைக் குறிப்பிடலாம்.
புலம்பெயர்நாடுகளில் இனம், மொழி மற்றும் நிறம் அடிப்படையில் சில நாடுகளில் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர். அத்துடன் போதிய ஊதியம் வழங்கப்படாமை, பாதுகாப்பற்ற பணிச்சூழல் மற்றும் மனிதக் கடத்தல் கொடுமைகளுக்கு ஆளாகுதல் போன்ற உரிமை மீறல்களுக்கும் அம் மக்கள் ஆளாகின்றனர்.
தற்காலச் சூழலும் 2025-ன் பார்வையும்
சமூகத் தனிமை என்பதும் பெரியதொரு சிக்கல். புதிய நாட்டின் கலாச்சாரம் மற்றும் மொழியோடு ஒத்துப்போவதில் ஏற்படும் சிரமங்களால் அவற்றுடன் ஒன்றிப்போக இயலாமல் மனவுளைச்சலுக்கு புலம்பெயர்ந்தோர் உள்ளாகின்றனர்.
அண்மையில் இலங்கையை சேர்ந்த இளைஞன் தனிமை, விரக்தி, வேலையின்மை, அகதிமுகாம் வாழ்க்கை, நாட்டிற்குத் திரும்பமுடியாத பொருளாதார நிலை என்பவற்றால் தவறான முடித்து தன்னை மாய்த்த செய்தி பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் முறையான ஆவணங்கள் இல்லாதபோது நாடு கடத்தப்படும் அச்சம் மற்றும் சிறைவாசம் அனுபவித்தல் போன்ற சட்டச் சிக்கல்களுக்கும் ஆளாக நேரிடுகின்றது.
இன்று 2025 ஆம் ஆண்டில், தொழில்நுட்ப வளர்ச்சியால் புலம்பெயர்வு எளிதாகி இருந்தாலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இடப்பெயர்வுகள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
உலக நாடுகள் புலம்பெயர்ந்தோரை வெறும் ‘தொழிலாளர்களாக’ மட்டும் பார்க்காமல், அவர்களை ‘மனிதர்களாக’ மதித்து, அவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.
பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட புலம்பெயர்வை ஊக்குவிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்றுள்ளன.
ஈழப் போராட்டத்தில் புலம்பெயர்ந்தோர் பங்களிப்பு
ஈழப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.
தாயகத்தில் விடுதலைப் போராட்டம் நடந்த சமயத்தில் போராட்டத்திற்கான பொருளாதாரத் தேவைகளை முன்னின்று வழங்கியதோடு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளைத் தொடர்ச்சியாக அனுப்பினர்.
விடுதலைப் புலிகள் களத்தில் சாதனைகளைச் செய்ய புலத்தில் தமிழர்களின் உழைப்பு பேருதவியாக இருந்தது.
சர்வதேச அளவில் ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்று, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக அமைப்புகளின் கவனத்தை ஈர்ப்பதிலும் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு அளப்பெரியது.
2009 இறுதிப் போரின் போது உலகெங்கும் பேரணிகளை நடத்திப் போரை நிறுத்த அழுத்தம் கொடுத்தனர்.
தற்போதும் தாயகத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் மக்களுக்கு உதவுவதுடன், போர்க்குற்றங்களுக்கான நீதி கோரும் போராட்டத்திலும் சர்வதேச ரீதியாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இன்று கனடாவில் இனப்படுகொலை சார்ந்து ஈழத் தமிழர்களுக்குச் சாதகமாக பல விடயங்கள் நடக்க புலம்பெயர் தமிழர்களே காரணமாகும். அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் இன்று உலகம் முழுவதிலும் பல முக்கிய நிலைகளிலும் பொறுப்புக்களிலும் உள்ளனர்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கனியன் பூங்குன்றனாரின் கூற்றுக்கிணங்க, உலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினரே.
புலம்பெயர்ந்தோர் அந்தந்த நாடுகளின் வளர்ச்சிக்கு வழங்கும் பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்வதோடு, அவர்களுக்கு எதிரான கொடுமைகளை ஒழிக்க நாம் உறுதியேற்படுன் அவர்களுக்கு எதிரான மீறல்களையும் இல்லாது செய்ய வேண்டும்.
புலம்பெயர்தலும் ஒரு வாழ்வாகிவிட்ட நிலையில் புலம்பெயர்ந்தோரின் கண்ணியம் காக்கப்படுவதே ஒரு நாகரீக சமூகத்தின் அடையாளமாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 19 December, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 1 மணி நேரம் முன்