யாழில் எம்.பியால் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாரவூர்தி.....! நீதிமன்றின் உத்தரவு
யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பகுதியில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் (K.Ilankumaran) தடுத்து நிறுத்தப்பட்டு சாவகச்சேரி காவல்துறையினரிடம் பாரப்படுத்தப்பட்ட சுண்ணக்கல் பாரவூர்தி 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.
அதன் உரிமையாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து பிணைமுறியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரவூர்தியின் உரிமையாளர் நகர்த்தல் பத்திரத்தைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில் நேற்று (07) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டவிரோத சுண்ணக்கல் கடத்தல்
இதன்போது பாரவூர்தியில் சட்டவிரோத சுண்ணக்கல் கடத்தல் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கனியவளச் சட்டத்தின் கீழ் புவிச்சரிதவியல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட முறையான அனுமதிப் பத்திரத்துக்கு அமைய சுண்ணக்கற்களை காவுகை செய்ததாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு பாரவூர்தியின் உரிமையாளரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
தனியார் நிறுவனம் ஒன்றால் அகழப்பட்ட சுண்ணக்கற்களை சிறிய கற்களாக உடைத்து, அவற்றை காவுகை செய்வதற்கு பிறிதொரு அனுமதிப் பத்திரங்களைப் பெறவேண்டிய அவசியம் சட்டத்தில் இல்லை என்றும் குறித்த சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அத்துடன் இதுபோன்ற வழக்குகளில் கெப்பிட்டிக்கொலாவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் சட்டத்தரணி நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
மேலும், முறையாக அனுமதிப் பத்திரம் பெற்று கல்லுடைக்கப்பட்ட இடத்தில் இருந்து சுண்ணக்கல் கொள்வனவு செய்யப்பட்ட பற்றுச்சீட்டையும் பாரவூர்தியின் உரிமையாளரின் சார்பாக நீதிமன்றத்தின் கவனத்துக்குச் சட்டத்தரணி கொண்டுவந்தார்.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இந்த நிலையில் சமர்ப்பணங்களை ஆராயந்த நீதவான், 5 லட்சம் ரூபா பிணையில் பாரவூர்தியையும் அதில் இருந்த சுண்ணக்கற்களையும் விடுவித்தார்.
அத்துடன், காவல்துறையினரின் கோரிக்கைக்கு அமைய உடைக்கப்பட்ட சுண்ணக் கற்களை பகுப்பாய்வுக்காக அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அண்மைக்காலமாக சட்டத்தைக் கையிலெடுத்துச் செயற்படுகின்றனர் எனவும் காவல்துறையினர் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை தான்தோன்றித் தனமாக நிறைவேற்றும் அவர்களின் செயற்பாடு தொடர்பிலும் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனால் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |