சுப்பர்மடம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில்- எட்டப்படாத தீர்மானம்!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களது ஆதரவை வழங்கி வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவ அமைப்புகளும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் நேரடியாக போராட்ட களத்துக்கு சென்று ஆதரவளித்துள்ளனர்.
அத்தோடு முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனும் போராட்ட இடத்திற்கு சென்று ஆதரவளித்திருந்தார். இன்று காலை போராட்டகாரர்களுடன் பேசுவதற்காக மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படையினர், காவல்துறையினர் மற்றும் கடலோர காவல்ப்படை அதிகாரிகள் சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் எந்தவிதமான முடிவும் எட்டப்படாததால் அதிகாரிகள் திரும்பி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.















