யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு
ஜனவரி 31ஆம் திகதி முதல் கொழும்புக்கும் (Colombo) காங்கேசன்துறைக்கும் (Kankesanturai) இடையில் இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை தினசரி சேவையில் ஈடுபடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை தொடருந்து திணைக்கள (Department of Railway ) பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர (Dhammika Jayasundara) தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட தூர சேவைகளுக்காகவும் பல புதிய தொடருந்து சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கும் அந்த திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலம்
குறிப்பாக மலையக மார்க்க தொடருந்து சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாகவும், ஈர்ப்பு அதிகமாகவும் இருப்பதுடன் தொடருந்து சேவைக்கான அதிக கேள்வி இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தம்மிக ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, பெப்ரவரி மாதம் முதல் எல்ல ஒடிஸி - கண்டி மற்றும் எல்ல ஒடிஸி - நானு ஓயா ஆகிய இரண்டு புதிய தொடருந்து சேவைகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், எல்ல ஒடிஸி - கொழும்பு தொடருந்து சேவையில் மேலதிக பயணத்தை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்ல ஒடிஸி தொடருந்து சேவை
எல்ல ஒடிஸி - கண்டி தொடருந்து சேவை, பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிக்கும் தெமோதரவுக்கும் இடையில் இயக்கப்படும் என்று தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.
எல்ல ஒடிஸி - நானுஓயா தொடருந்து சேவை, பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையில் இயக்கப்படவுள்ளது.
கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான எல்ல ஒடிஸி - கொழும்பு தொடருந்து சேவையில் மேலதிக பயணத்தை பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொழும்பிலிருந்தும், பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதுளையிலிருந்தும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |