அரசியல் கைதிகளை விடுவிப்பேன் என்ற அநுரவின் வாக்குறுதி காற்றில் பறந்து விட்டதா...!
இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று இலங்கை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார (Harshana Nanayakkara) கூறியுள்ளார். கடந்த காலத்தில் ஆட்சி புரிந்த ஶ்ரீலங்கா அரச தரப்பினர் அணுகிய அதே அணுகுமுறையையே தற்போதைய அரசும் பின்பற்றுகிறது என்பதை இந்தப் பேச்சு மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது.
ஈழத் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று அரசியல் கைதிகள் விவகாரம். இந்த விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
தமிழிர் தாயகத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. கடந்த காலத்தில் எதிர்கட்சிகளாக இருந்தவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் கொடுத்து வந்துள்ளனர்.
ஏன் இன்று ஶ்ரீலங்காவை ஆள்கிற அரசும் குரல் கொடுத்துவிட்டு இன்று அரசியல் கைதிகள் இல்லை எனக் கைவிரிக்கிறது.
நாணயமற்ற பேச்சு
நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்றொருவரும் இல்லை என்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளார்கள் என்றும் இவர்களில் சிலருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிலரது வழக்குகள் நீண்டகாலமாகவும், குறுகிய காலமாகவும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் நீதி அமைச்சர் ஹர்சன நாயணக்கார கூறியுள்ளார்.
நாடாளவிய ரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பட்டியலை விரைவாக தயாரித்து வருவதாகவும் அதனைத் தயாரித்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்று முன்னெடுப்பதற்குத் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமது அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நியாயமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதையே இலக்காக கொண்டிருப்பதாகக் கூறியுள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன, குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றுள்ளவர்கள் குறித்து எம்மால் எந்தவிதமான நடவடிக்கைகளையும் செய்ய முடியாது என்றும் ஏனென்றால் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் இலங்கைத் தீவில் புரையோடிப் போன இனப்பிரச்சினை காரணமாக தமிழ் இளைஞர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களை ஶ்ரீலங்கா அரசும் பன்னாட்டுச் சமூகமும் கடந்த காலத்தில் அரசியல் கைதிகள் என்றே அழைத்து வந்தது.
விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துக்கள்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு - தமிழர் தாயகத்தில் கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வ்வுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு என பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள மக்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்திட்டுள்ளனர். கடந்த காலத்தில் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டபோதும் இன்னமும் பலர் சிறையில் இருந்து வாடுகின்றனர்.
நாட்டில் ஏற்படும் நெருக்கடிகள் முரண்பாடுகள் காரணமாக கைது செய்யப்பட்டவர்களை காலச் சூழல் மாறுகின்றபோது விடுவிப்பது சிறந்த நல்ல்லெண்ணமாகவும் அணுகுமுறையாகவும் பின்பற்றப்படுவதுண்டு. கடந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை வந்தவர் எனச் சந்தேகிக்கும் அரசியல் கைதியை விடுவித்தார்.
போர்க்காலத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பலருடைய வாழ்க்கை இருண்ட காலத்தில் தள்ளப்பட்டது. இவர்களின் வாழ்வு முழுவதும் சிறையில் கழிந்துள்ளது. மிக நீண்ட கால சிறையிருப்பினால் பல்வேறு உடல், உளத் தாக்கங்களுக்கு இவர்கள் உள்ளாகிய நிலையில் குறை உயிரோடு அவர்கள் வாழ்கின்றனர்.
இதனால் பல குடும்பங்களின் வாழ்வும் மகிழ்ச்சியும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. தந்தையரை சிறையில் விட்டு வாடுகிற பிள்ளைகளும் பிள்ளைகளை சிறையில் விட்டு வாடுகிற தாய், தந்தையர்களும் என்று தமிழர் தேசம் கடந்த பல தசாப்தங்களாக கண்ணீரோடும் துயரத்தோடும் இருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த காலத்தில் பல்வேறு போராட்டங்களின் மூலம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய தமிழர் தேசம், இப்போது கையெழுத்து திரட்டும் போராட்டத்தின் வழியாகவும் வலியுறுத்துகிறது.
தடுமாறும் அநுர அரசு
செப்டம்பர் மாத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்திலும் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் தெளிவாக அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வோம் எனக் கூறியுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த், இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்றால் ஏன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்று கூறியுள்ளீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் கைதிகள் இல்லை என்று கடந்த காலத்தில் மிக மோசமான அடக்குமுறைகளை செய்த அரசாங்கங்கள்கூட இவ்வளவு அழுத்தம் திருத்தமாக சொன்னது கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை இன்றைய அரசின் அநீதி முகத்தைக் காட்டுகிறது. அரசியல் கைதிகளின் விடுதலை என்பது தமிழ் மக்களின் அரசியலாகவும் மிக முக்கியமான கோரிக்கையாகவும் இருக்கின்ற நிலையில் ஶ்ரீலங்காவின் நீதியமைச்சர் அதனை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிக்கின்றார்.
அத்துடன் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அநுரகுமார திசாயாக்கா அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்று கூறியுள்ளார். வவுனியாவில் பேசிய அநுரகுமார திசாயநாயக்க, “இங்கு பாரிய யுத்தம் ஒன்று நடைபெற்றது. பாரிய அழிவு ஏற்பட்டது. அதனால் அரசியல் சிறைக்கைதிகள் இருக்கிறார்கள்.
நான் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர்களை விடுவிக்கத் தயார். தெற்கு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமா? இல்லை. ஐக்கியமான தெற்கு இப்போது உள்ளது. அன்று அப்படியல்ல, பிளவடைந்து அரசியல் செய்துள்ளார்கள். பிரிந்து அரசியல் செய்துள்ளார்கள். எனவே பிரச்சனையை வேறுவேறாகப் பார்த்தார்கள். இன்று நாம் ஒன்றிணைந்துள்ளோம் என்று தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வாக்குறுதி அளிக்கும் விதமாக அநுரகுமார பேசியுள்ளார்.
மிகப் பெரும் ஊழலும் மோசடியும்
கடந்த காலத்தில் எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கூறிவிட்டு தாம் ஆட்சிக்கு வந்ததும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது, அப்படி எவரும் இல்லை என்று ஆட்சி புரிகிற அதே அரசியலைத்தான் தேசிய மக்கள் சக்தி என்கிற ஜேவிபியும் முன்னெடுக்கின்றது. அதனையே அமைச்சரின் பேச்சு தெளிவாக உணர்த்துகிறது.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கடந்த காலத்தில் ஜனாதிபதி அநுரவும் போராட்டங்களை நடாத்தினார். மக்கள் விடுதலை முன்னணி தன் அரசியலாக அதனைச் செய்த்து. ஆனால் இப்போது அமைச்சர் பிமல் ரத்னாயக்கா, புதிய சட்டம் உருவாக்கும்வரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவோம் என்கிறார்.
இச் சட்டத்தைப் பயன்படுத்துபவர்கள், அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்றுதான் கூறுவார்கள். இதுவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறும் செயல். இப்படி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறுவதும் மக்கள் ஆணையை மீறுவதும்தான் மிகப் பெரிய ஊழலும் மோசடியும். ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு எதிரான காட்சி மாறுவதில்லை என்பது இன்று அநுர ஆட்சியிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 22 January, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.