யாழில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த பேருந்து - எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - பருத்தித்துறை 750 வழித்தடத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேநாயகத்திற்கு அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் காணொளிகள்
தனியார் பேருந்து மேற்படி வழித்தடத்தில் சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளிகள் பகிரப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு, வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவருக்கு வடக்கு மாகாண ஆளுநர் நேற்று அறிவுறுத்தியிருந்தார்.
இதற்கு அமைவாக முதல் கட்டமாக 29 sri 7911 என்ற தனியார் பேருந்தின் உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதன் சாரதி, நடத்துனர் மற்றும் சிற்றூர்தியின் உரிமையாளர் மேலதிக நடவடிக்கைக்காக உரிய ஆவணங்களுடன் அதிகார சபைக்கு சமூகமளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் அறிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) தனியார் பேருந்து ஒன்று வீதி விதிமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவலாக காணொளிகள் பகிரப்பட்டு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வழித்தடத்தில் நேற்று (28.12.2024) இடம்பெற்றுள்ளது.
29 ශ්රී 7911 என்ற பதிவு இலக்கத்தை கொண்ட பேருந்தே இவ்வாறு வீதியில் ஆபத்தான முறையில் பயணித்துள்ளது.
கடுமையான நடவடிக்கை
பின்னால் வரும் வாகனத்துக்கு வழி விடாமல் வீதியின் குறுக்கும் மறுக்குமாக பேருந்தானது பயணத்தில் ஈடுபட்டுள்ளது.
பயணிகள் மத்தியிலும் வீதியில் பயணித்தவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த காணொளியானது சமூக ஊடகங்களில் வைரலாகும் நிலையில் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
வடக்கு மாகாண ஆளுநர்
இந்நிலையில், இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறான சாரதிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் க.மகேஸ்வரனை வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கு அமைவாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
செய்திகள் - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |