யாழ். பல்கலை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Harrish
in சட்டம் மற்றும் ஒழுங்குReport this article
யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna) விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான சிரேஷ்ட மாணவர்கள் இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு வைத்து அந்த மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், தலைக்கவசத்தாலும் தாக்கியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
தாக்குதல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளான நாத்தாண்டிய பகுதியை சேர்ந்த மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனால் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் இரண்டு சிரேஷ்ட மாணவர்களைக் கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியதை அடுத்து மேற்படி இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்கள் தொடர்பிலும் தாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , தலைமறைவாகவுள்ள அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
