தமிழரசுக் கட்சி வசமாகியது வலிகாமம் தெற்கு பிரதேச சபை
புதிய இணைப்பு
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு நேற்று (19) பிற்பகல் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தவிசாளர் தெரிவுக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாசும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த கருணைநாதன் அபாராசுதனும் முன்மொழியப்பட்டார்.
பகிரங்க வாக்களிப்பில் தவிசாளர் தெரிவில், இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாசுக்கு ஆதரவாக தமிழரசுக் கட்சியை சேர்ந்த 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் என மொத்தமாக 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த கருணைநாதன் அபாராசுதனுக்கு ஆதரவாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 6 உறுப்பினர்கள் என மொத்தமாக 12 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 5 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையாக செயற்பட்டனர். இதன் அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்து இடம்பெற்ற பிரதித் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த செல்வரத்தினம் உதயகுமாரன் 14 வாக்குகளைப் பெற்று பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாம் இணைப்பு
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழுவின் கிருஷ்ணன் கோவிந்தராசன் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார்.
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் நேற்று (19) காரைநகர் பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
11 உறுப்பினர்களை கொண்ட காரைநகர் பிரதேச சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சை குழு, தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய மக்கள் சக்தி ஆகியன தலா இரண்டு ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
தவிசாளர் பதவிக்காக முன்மொழியப்பட்ட சுயேட்சை குழுவின் கிருஷ்ணன் கோவிந்தராசனும் பிரதி தவிசாளருக்காக முன்மொழியப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் ஆன்டியையா விஜயராசாவும் போட்டியின்றி ஏகமனதாக தெரிவாகினர்.
காரைநகர் பிரதேச சபையில் ஆட்சியமைப்பது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியப் பேரவை மற்றும் சுயேட்சைக் குழு ஆகியவற்றுக்கிடையில் ஓர் உடன்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
அமிர்தலிங்கத்தின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
யாழ்ப்பாணம் (Jaffna) - வலிகாமம் மேற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக ஜெயந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) பதில் பொது செயலாளர் மற்றும் புதிய தவிசாளர் ச.ஜெயந்தன் ஆகியோர் இணைந்து, வலி மேற்கு பிரதேச சபையின் வளாகத்தில் உள்ள முன்னாள் எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தனர்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - வலிகாமம் மேற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக ஜெயந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் தவிசாளர் தெரிவுக்காக இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ச.ஜெயந்தன் மற்றும் தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் பகிரங்க வாக்கெடுப்பினை 18பேரும், 8 பேர் இரகசிய வாக்கெடுப்பினையும் கோரினர்.
பகிரங்க வாக்கெடுப்பு
அந்தவகையில் பெரும்பான்மை அடிப்படையில் பகிரங்க வாக்கெடுப்பு நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதன்போது க.ஜெயந்தனுக்கு 15 வாக்குகளும், சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமார் 7 பெற்றனர். அந்தவகையில் ச.ஜெயந்தன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
ச.ஜெயந்தனுக்கு ஆதரவாக இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் 10 பேரும், ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் இரண்டுபேரும், ஐ.ம.சக்தியின் ஒரு உறுப்பினரும், சுயேட்சை குழுவின் ஒரு உறுப்பினரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும் வாக்களித்தனர்.
அந்தவகையில் ச.ஜெயந்தன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அடுத்ததாக உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
பெயர்கள் பரிந்துரை
இதன்போது வே.சச்சிதானந்தம், க.இலங்கேஷ்வரன் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
அந்தவகையில் கந்தையா இலங்கேஸ்வரனுக்கு 14 வாக்குகளும், வே.சச்சிதானந்தனுக்கு 8 வாக்குகளும் கிடைத்ததுடன் தேசிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
அந்தவகையில் கந்தையா இலங்கேஸ்வரன் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

