யாழில். இளைஞனை ஆடைகளை களைத்து தாக்கிய சம்பவம் : நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , தாயின் கண் முன்னால் கட்டி வைத்து தாக்கிய கும்பலின் பிரதான சந்தேக நபரை எட்டு மாத கால பகுதி கடந்தும் காவல்துறையினர் கைது செய்யாது அசமந்தமாக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரதான சந்தேக நபருக்கும் வடக்கில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதனால் , காவல்துறையினர் அந்நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் , சில காவல்துறை உத்தியோகஸ்தர்கள் அந்நபரை கைது செய்ய முயற்சித்த வேளையிலும் , உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அந்நபரை கைது செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் , தமது நலன் சார்ந்து மூத்த சட்டத்தரணி ஒருவரை நியமித்துள்ளனர்.
அத்தோடு, அவரூடாக யாழ் . நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கினை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுத்து , காவல்துறையினர் பிரதான சந்தேக நபரை எட்டு மாத காலம் கடந்தும் கைது செய்யாது அசமந்தமாக செயற்படுவதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த சந்தேகநபரை இதுவரையான கால பகுதி வரையில் கைது செய்யாதமைக்கான காரணம் தொடர்பில் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
பின்னணி
இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 15 பேர் வரையில் காவல்துறையினர் அடையாளம் கண்டு கொண்டனர்.
அவர்களில் ஒரு சிலரை மாத்திரம் கைது செய்து வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களை காவல்துறையினர் எட்டு மாத கால பகுதி கடந்தும் இதுவரையில் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 மணி நேரம் முன்
