வட்டுக்கோட்டை வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞனை கடத்தி செல்ல பயன்பட்ட கார் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட கார் இரத்த கறைகளுடன் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த காரானது நேற்று (12) நள்ளிரவு வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள சந்தேக நபரொருவரின் காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் காரில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் மரக்கட்டைகள், இரும்புக் கம்பிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது, மேலும் அந்தக் காரை சோதனை செய்த தடயவியல் காவல்துறையினர் இரத்த மாதிரிகளை சேகரித்தனர்.
தீவிர விசாரணை
தவிரவும் இந்தத் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் நேற்று (12) கிளிநொச்சிப் பகுதியில் பதுங்கியிருந்த வேளையில் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
வட்டுக்கோட்டை அராலி பகுதியைச் சேர்ந்த 37, 32,25, 22 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
சந்தேக நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இன்று (13) மாலை அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த தீர்மானித்துள்ளனர்.
வாள்வெட்டு தாக்குதல்
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போது இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்பவரே இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |