மேற்கு ஆசியப் பதற்றம்: எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்ய இந்தியா - ஜப்பான் இணக்கம்
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கவும் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் நெருக்கமாக ஒத்துழைக்கப் போவதாக இந்தியாவும் ஜப்பானும் உறுதியளித்துள்ளன.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஹார்முஸ் நீரிணையில் நிலவும் கப்பல் போக்குவரத்துத் தடைகள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.
வர்த்தகத்திற்குப் பாதிப்பு
இந்த உரையாடல் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சர்வதேச வர்த்தகத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பது மற்றும் மேற்கு ஆசியாவின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தப் போர் மோதல்களில் உயிரிழந்த இந்தியர்களுக்காக ஜப்பானிய அமைச்சர் தெரிவித்த இரங்கலுக்குத் தனது நன்றியினையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
பிராந்தியத்தின் அமைதியைக் கட்டியெழுப்ப இரு நாடுகளும் தங்களது இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த இணக்கம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |