அரசாங்கத்திற்கு எதிரான பிரதான சாட்சி ஜனக ரத்நாயக்க
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்காக கொண்டுவரப்பட்ட நாடாளுமன்ற விவாதத்தின் இறுதியில் இந்த அரசாங்கம்தான் உண்மையான பிரதிவாதி என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நேற்று (22) தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிரான பிரதான சாட்சி ஜனக ரத்நாயக்க எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை மக்களின் இறையாண்மையைப் பறிக்கும் செயலாகும் என்றும் வாசுதேவ தெரிவித்தார்.
பொதுமக்களை சுரண்டும் மின்சாரசபை
பொதுமக்களை சுரண்டுவதற்கு மின்சார சபை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுக்கும் ஜனக ரத்நாயக்கவின் முயற்சி அரசாங்கத்திற்கு பெரும் வேதனையாக உள்ளதாக தெரிவித்த நாணயக்கார, அரசாங்கத்திற்கு சாதகமாக செயற்படாத ஜனக ரத்நாயக்கவை தண்டிக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை தனது பணியாளராக மாற்ற
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை தனது பணியாளராக மாற்ற அரசாங்கம் விரும்புவதாகவும் அவர் கூறினார். ஆனால், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் சுதந்திரத்தைப் பாதுகாத்து, ரத்நாயக்க மக்களுக்கு தனது கடமையைச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி நீக்கம் தொடர்பில் எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு எதிராக மின்சார பாவனையாளர் சங்கத்தினால் கொழும்பு பொது நூலகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வில் உரையாற்றும் போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் பல வெகுஜன அமைப்பு பிரதிநிதிகள் இங்கு உரையாற்றினர்.
