போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் 'மிராக்கிள் டோம்' நிறுவனம் மீண்டும் செயற்பாட்டில்
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு சொந்தமான நீர்கொழும்பில் உள்ள 'மிராக்கிள் டோம்' நிறுவனம் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதாக வண. பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்தார்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாட்டில் இருக்கும் போது அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் மிராக்கிள் டோமில் இருந்து வழிபாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
போதகரின் காணொளிகள் இணையத்தில்
போதகரின் காணொளிகளை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக தெரிவித்த கஸ்ஸப தேரர், இலங்கைக்கு இரகசியமாக வந்து வழமையான விடயங்களை மேற்கொள்வதற்கு போதகர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரசங்கம் மீது தணிக்கை வேண்டும்
ஜெரோம் பெர்னாண்டோ தற்போது இந்த நாட்டின் நீதிமன்றங்களில் தேடப்படும் நபராக இருப்பதாகவும் அவரது பிரசங்கத்தை தணிக்கை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கஸ்ஸப தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
