ஜே.ஆரின் தந்திரம்
புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே சிண்டு முடிக்கும் தனது இராஜதந்திர நடவடிக்கையை ஆரம்பிக்க ஜே.ஆர் தயாரானார்.இடைக்கால நிர்வாகசபையை உடனடியாகவே ஆரம்பிக்கவேண்டிய தேவை இந்தியாவிற்கு இருந்தது.
இதனை நன்கு புரிந்திருந்த ஜே.ஆர். கவனமாக காய்களை நகர்த்த ஆரம்பித்தார். இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கு புலிகள் தடையாக இருந்தால், இந்தியா நிச்சயம் ஒரு கோபப் பாய்ச்சலை புலிகள் மீது மேற்கொள்ளத் தயங்காது என்பது ஜே.ஆர். இற்கு நன்றாகத் தெரியும்.
ஜே.ஆர்.இன் குள்ளநரித் தந்திரம்
இடைக்கால நிர்வாகசபைக்கு புலிகள் பிரேரித்திருந்த பெயர்ப் பட்டியலை கவனமாகப் படித்துப் பார்த்த ஜே.ஆர்., தனது திட்டத்தை நிறைவேற்ற சரியான சந்தர்ப்பம் வாய்துவிட்டதை எண்ணி உற்சாகம் அடைந்தார்.
புலிகளின் பெயர்ப் பட்டியலில், இடைக்கால நிர்வாக சபையின் தலைவராக என்.பத்மநாதனை நியமித்து அனுப்பிவைத்திருந்தார்கள். அதேவேளை, இந்தியத் தூதுவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சம்பிரதாயத்திற்காக வேறு இரண்டு நபர்களின் பெயர்களையும் அந்த பெயர் பட்டியலில் புலிகள் இணைத்திருந்தார்கள்.
புலிகளை கோபமூட்டி, இடைக்கால நிர்வாகசபையை ஏற்றுக்கொள்வதில் இருந்து புலிகளை பின்வாங்கச் செய்வதற்கு, இதனை ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்ள ஜே.ஆர். தீர்மானித்தார்.
புலிகள் தலைவராகத் தெரிவு செய்து அனுப்பிய பத்மநாதனுக்கு பதிலாக, புலிகளின் தெரிவுப் பட்டியலில் மூன்றாவதாக இருந்த சி.வி.கே.சிவஞாணம் என்பவரை இடைக்கால நிர்வாக சபையின் தலைவராக ஜே.ஆர். தேர்ந்தெடுத்தார்.
“பத்மநாதன் மிகவும் இள வயதை உடையவர். சிக்கல்கள் நிறைந்த வடக்குகிழக்கு மாகாணத்தின் இடைக்கால நிர்வாகசபையை பொறுப்புடன் கையாழுவதற்கு அவருக்கு அனுபவம் போதாது. அத்தோடு, பத்மநாதன் விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டு சிறைவாசம் அனுபவித்ததுடன், 87ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் விடுதலையாகி வெளியே வந்தவர்.
எனவே அவரை தலைவராக நியமிக்க முடியாது என்று ஜே.ஆர். திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
ஜே.ஆர். தனவு தெரிவு மாற்றத்திற்கு வெளிப்படையாகத் தெரிவித்த காரணம்தான் இது. ஆனால், உண்மையிலேயே அவர் அவர் இவ்வாறு தனது தெரிவில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு மறைமுகமான நயவஞ்சகக் காரணம் ஒன்றும் உள்ளது.
புலிகள் தமது பட்டியலில் தலைவராகத் தெரிவு செய்து அனுப்பியிருந்த என்.பத்மநாதன் என்ற முன்னாள் உதவி அரசாங்க அதிபர், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்.
அதேவேளை ஜே.ஆர்.தெரிவு செய்த சிவஞானமோ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவஞானத்தைத் தலைமைப் பதவிக்கு தெரிவு செய்வதன்மூலம், புலிகளுக்கு எதிரான ஒரு பிரதேசவாத அபிப்பிராயத்தை கிழக்குவாழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் கபடத் திட்டத்திலேயே ஜே.ஆர். இவ்வாறு நடந்துகொண்டார்.
இடைக்கால நிர்வாக சபையின் தலைமைப் பொறுப்பு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டால், தமது பிரித்தாழும் தந்திரம் தமிழ் மக்கள் மத்தியில் செல்லுபடியற்றதாகிவிடும் என்று நினைத்த ஜே.ஆர். இடைக்கால நிர்வாக சபைக்கான தமது தெரிவாக புலிகள் நியமித்திருந்த கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த பலரது பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கிவிடவும் தீர்மானித்தார்.
மட்டக்களப்பு அமிர்தகழியைச் சேர்ந்த பிரபல கவிஞரும், அரசியல்வாதியுமான கவிஞர் காசி ஆணந்தனை புலிகள் இடைக்கால நிர்வாக சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்திருந்தார்கள்.
அவரின் பெயரையும் ஜே.ஆர். பட்டியலில் இருந்து நீக்கியிருந்தார்.அதேபோன்று புலிகளின் பட்டியில் காணப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில முஸ்லிம்களின் பெயர்களையும் நீக்கியிருந்தார்.
புலிகளுக்கு எதிரான ஒரு மாற்றுக் கருத்தை கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடனேயே ஜே.ஆர். இவ்வாறு நடந்துகொண்டார்.
புலிகள் அதிருப்தி
ஜே.ஆரின் இந்த தெரிவு பற்றி புலிகள் தமது அதிருப்தியை வெளியிட்டார்கள்.ஏற்கனவே தீர்மாணித்ததன்படி தங்களது தெரிவின் பிரகாரமே இடைக்கால நிர்வாகசபை அமைக்கப்படவேண்டும் என்று புலிகள் உறுதியாகத் தெரிவித்து விட்டார்கள்.
அதற்கு மேலாக, விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையில் செப்டெம்பர் 28ம் திகதி கைச்சாத்திடப்பட்ட இரகசிய ஒப்பந்தத்தின்படி, இடைக்கால நிர்வாகசபையின் தலைவரும், புலிகள் தரப்பில் 5 பிரதிநிதிகளும், இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளில் ஒருவரும் விடுதலைப் புலிகளாலேயே நியமிக்கப்படவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
அப்படி இருக்க திடீரென்று ஜே.ஆர். இவ்வாறு நடந்துகொள்ளத் தலைப்பட்டிருப்பது பற்றி தமது கோபத்தை புலிகள் இந்தியத் தூதுவரிடம் வெளியிட்டார்கள்.
29.09.1987 அன்று காலை, இந்தியத் துதுவர் ஜே.என்.தீட்சித் ஜே.ஆரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து புலிகளின் அபிப்பிராயத்தை எடுத்துரைத்தார்.
ஆனால் ஜே.ஆர். தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவர ஒரேயடியாக மறுத்துவிட்டார். பத்மநாதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உதவி அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் பெருமளவு போராளிகள் சிறைகளில் இருந்து தப்பிச்செல்ல உதவிசெய்தவர்.
அவரை இடைக்கால நிர்வாகசபையின் தலைவராக நியமிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்த ஜேஆர்.புலிகள் அமைப்பு போன்ற ஒரு பிரிவினைவாத அமைப்பானது, எனது தலைமையின் கீழ் உள்ள இந் நாட்டின் ஒரு பகுதியை எவ்வாறு நிர்வகிக்கவேண்டும் என்பதில், எனக்கு தொடர்ந்து கட்டளையிட்டுக்கொண்டிருக்க முடியாது. அதற்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்.என்று இந்தியத் தூதரிடம் தெரிவித்துவிட்டார்.
இந்தியத் தூதரைப் பொறுத்தவரையில், இடைக்கால நிர்வாக சபைக்கு யார் தலைவராக இருப்பது என்பது பற்றி அவருக்கு அக்கறை இருக்கவில்லை. உடனடியாக ஒரு நிர்வாக சபையை அமைத்து, புலிகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு ஒரு முடிவுகட்டுவதே அவரது நோக்கமாக இருந்தது.
திலீபன், மதன், நல்லையா, குகசாந்தினி போன்றவர்களின் உண்ணாவிரதப் போராட்டங்களினால், இந்தியாவிற்கும், அதன் அமைதி முயற்சிகளுக்கும்(??) தமிழ் மக்கள் மத்தியிலும், சர்வதேச மட்டத்திலும் ஏற்பட ஆரம்பித்திருந்த களங்கத்தை துடைக்கவேண்டிய அவசியம் இந்தியாவிற்கு ஏற்பட்டிருந்தது.
அதனாலேயே அவசர அவசரமாக இந்தியா இந்த இடைக்கால நிர்வாகசபை என்ற நாடகத்தை அரங்கேற்றத் துடித்துக்கொண்டிருந்தது.
அதேவேளை, புலிகளுக்காக ஜே.ஆரை கெஞ்சவேண்டிய, அல்லது மிரட்டவேண்டிய அவசியமும், இந்தியாவிற்கு இருக்கவில்லை.
அப்படிச் செய்ய இந்தியா விரும்பவும் இல்லை. எனவே ஜே.ஆரின் முடிவை இந்தியத் தூதுவர் இந்திய இராணுவ அதிகாரிகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு அறிவித்தார். 30.09.1997 அன்று காலை, விடுதலைப் புலிகள் தமது முடிவை இந்தியத் தூதுவருக்கு அறிவித்தார்கள்.
ஈழத் தமிழருக்கு பாரிய துரோகம்
‘நாங்கள் நியமித்ததன்படி பத்மநாதனை தலைமைப் பதவிக்கு நியமிக்காத பட்சத்தில், இந்த இடைக்கால நிர்வாகசபையை தாம் ஏற்றுக்கொள்ளப்பபோவதில்லை என்ற தமது முடிவை புலிகள் இந்தியத் தூதருக்கு அறிவித்திருந்தார்கள். இது தொடர்பாக விடுதலைப் புலிகள் ஒரு அறிக்கையையும் பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார்கள்.
“நாங்கள் பிரேரித்திருந்த பெயர் பட்டியலை சிறிலங்காவின் அதிபர் ஏற்க மறுத்ததன் காரணமாக, உத்தேச இடைக்கால நிர்வாக சபை தொடர்பாக பல சிக்கல்கள் உருவாகின. இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கு எங்கள் தரப்பில் இருந்து பெயர்களை அரசாங்கம் கேட்டிருந்தது.
எங்கள் தெரிவில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பலரை முதன்மைப்படுத்தி நாங்கள் பட்டியல் தயாரித்து அனுப்பிவைத்திருந்தோம்.
ஜெயவர்த்தனாவோ, நாங்கள் நியமித்திருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, தனது முடிவை வெளியிட்டிருந்தார். இடைக்கால நிர்வாக சபையின் தலைமைப் பதவிக்கு நாங்கள் நியமித்த நபரின் பெயரையும் அவர் நீக்கியதைத் தொடர்ந்தே, இந்த இடைக்கால நிர்வாக சபையை ஏற்பதில்லை என்ற முடிவை நாங்கள் எடுக்கவேண்டி இருந்தது.
இடைக்கால நிர்வாகசபையை விடுதலைப் புலிகளே குழப்புகின்றார்கள் என்று வெளி உலகிற்கு காண்பிப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட சதி நடவடிக்கையே இது. இந்தியாவும் இதற்குத் துணைபோனதுதான் எமக்கு மிகுந்த வேதனையாக இருக்கின்றது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இடைக்கால நிர்வாகசபை தொடர்பான சர்ச்சைகள் ஒரு முடிவுக்கு வந்தன. அதேவேளை, புதுவிதமான மற்றொரு சர்ச்சை ஈழமண்ணில் உருவானது. விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையிலான உறவை நிரந்தரமாகவே முறித்துவிடும்படியாக அமைந்த பல சம்பவங்கள் ஈழமண்ணில் அடுத்து அடுத்து இடம்பெறத் தொடங்கின.
இந்தியா தனது வரலாற்றுக் கடமைகளைக் கைவிட்டு, ஈழத் தமிழருக்கு பாரிய துரோகம் இழைத்த சம்பவங்கள் தொடராக இடம்பெற ஆரம்பித்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |