இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: புதிய காரணத்தை கண்டு பிடித்த புலனாய்வு துறை
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அழுத்தங்கள் விடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் நீதிபதியின் திடீர் வெளிநாடுப் பயணமானது ஏற்கனவே திட்டமிடப்பட்டமை எனவும் புலனாய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சரவணராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.
அதன்படி , சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.திரன் அலஸ் வழங்கிய உத்தரவின் பிரகாரம் இந்த விசாரணை நடத்தப்பட்டது.
இந்தியா செல்வதற்காக விடுமுறை
கடந்த மாதம் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்காக சரவணராஜா விடுமுறை கோரி விண்ணப்பித்த நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையிலேயே கடந்த 24ஆம் திகதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஏதேனும் குழுக்களின் செல்வாக்கு இருக்கிறதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி சரவணராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பில் நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் எதையும் பதிவு செய்யவில்லை.
ஆபத்தான பிரச்சினை
மேலும், செப்டெம்பர் 23 ஆம் திகதி தனது பதவி விலகல் கடிதத்தை நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்ததுடன் செப்டெம்பர் 24ஆம் திகதி அவர் வெளிநாட்டிற்கு சென்றார்.
அத்துடன் குறித்த நீதிபதி பிரதிவாதியாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவின் முன்னாள் மாவட்ட நீதிபதி சரவணராஜா 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு காவல்நிலையம் அவருக்குத் தேவையான சகல பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த நேரத்திலும் பாதுகாப்பு அல்லது உயிருக்கு ஆபத்தான பிரச்சினை எதுவும் எழுப்பப்படவில்லை. விசாரணையில், நீதிபதி செப்டம்பர் 24 ஆம் திகதி டுபாய்க்கு சென்றது தெரியவந்துள்ளது.
ஒக்டோபர் 12 ஆம் திகதி இலங்கை
அதற்காக குருநாகல் விற்பனைப் பிரதிநிதி ஒருவரிடமிருந்து எயார் அரேபியா விமானப் பயணச்சீட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அமெரிக்க தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் செயல்படவில்லை என்றால் மீண்டும் அழைக்க பயணச்சீட்டு விற்பனை முகவருக்கு கென்ய தொலைபேசி இலக்கம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனைப் பகுதியில் இருந்து விமானப் பயணச்சீட்டுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஷார்ஜா, நைரோபி, டெல்லி வழியாக ஒக்டோபர் 12ஆம் திகதி இலங்கை திரும்புவதற்கு பயணச்சீட்டு பெறப்பட்டது.
எனினும் விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, ஷார்ஜாவை அடுத்து நைரோபிக்கு செல்ல நீதிபதி விமான பயணச்சீட்டை பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.