இந்தியாவின் உள்ளகப் பிரச்சினையே கச்சதீவு விவகாரம் : அலி சப்ரி விளக்கம்
கச்சதீவு விவகாரம் இந்தியாவின் உள்ளகப் பிரச்சினையாகும் என்று வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
அரை நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவடைந்த கச்சதீவு விடயம் சம்பந்தமாக தற்போது எவ்விதமான உரையாடல்களும் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கைக்குச் சொந்தமாக கச்சதீவு தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்த கச்சதீவானது 1974இல் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியினால் (Indira Gandhi) இலங்கைக்கு வழங்கப்பட்டதாகும்.
பிரதமர் நரேந்திர மோடி
இந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி (Bharatiya Janata Party) கச்சதீவு மீட்புக் கோசத்தினை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளதுடன், காங்கிரஸ் கட்சியும் (Indian National Congress) தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்ற கழகமும் (Dravida Munnetra Kazhagam) தான் கச்சதீவினை இலங்கைக்கு தாரைவார்த்தது என்பதையும் வெளிப்படுத்தி வருகிறது.
இவ்வாறான நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்நாட்டில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இத்தகையதொரு சூழல் தான் கச்சதீவு விடயம் இந்திய அரசியல் கட்சிகளால் சீர்தூக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் உள்ளக அரசியல்
ஆகவே எம்மைப் பொறுத்தவரையில் இந்தியா இந்த விடயம் சம்பந்தமாக எம்முடன் உத்தியோகபூர்வமாக இன்னமும் உரையாடவில்லை. எனினும், அயல்நாடு என்ற வகையில் நாம் குறித்த விடயம் சம்பந்தமாக கரிசனைகளைக் கொண்டுள்ளோம்.
உண்மையில் கச்சதீவு 50 ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலமாகும். ஆகவே, கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாகிவிட்டது. இவ்வாறான நிலையில், தற்போது அதனைப் மீளப்பெறுமாறு வலியுறுத்துவதானது யதார்த்ததுக்கு புறம்பானதாகும்.
அதுமட்டுமன்றி, தமிழகத்தில் காணப்படுகின்ற உள்ளக அரசியல் நிலைமைகளே இந்த விடயம் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுவதற்கு காரணமாகின்றது.
எனவே, பிறிதொரு நாட்டின் உள்ளக அரசியல் விடயங்கள் சம்பந்தமாக தலையீடு செய்ய முடியாது. அதுவொரு முடிந்துபோன விடயமாகும்“ என அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |