நெடுந்தீவு கடற்படையினரின் கட்டுமானத்திற்காக கச்சதீவில் மணல் அகழ்வு - அம்பலமானது தகவல்!
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் வெடியரசன் கோட்டை தொடர்பான சர்ச்சை முடிவதற்குள் மற்றுமொரு சர்ச்சையான விடயம் அம்பலமாகியுள்ளது.
அதாவது, கச்சதீவு பகுதியில் உள்ள மண் திட்டுக்களில் இருந்து மணல் அகழப்பட்டு, நெடுந்தீவு சிறிலங்கா கடற்படையினரின் தேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றது என உத்தியோகபூர்வ தகவல் ஒன்று கசிந்துள்ளது.
இவ்வாறு கச்சதீவு மண் திட்டுக்களில் அகழப்படும் மணல் கடற்படையின் படகுகளில் நெடுந்தீவிற்கு கொண்டு வரப்படுவதனை அவ்வூர் மக்களும் அவதானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கச்சதீவிலிருந்து மணல்
நெடுந்தீவில் சிறிலங்கா கடற்படையினர் அதிகளவில் நிலைகொண்டுள்ளமையால் அவர்களின் கடற்படை முகாமிற்கான கட்டுமானப் பணிக்காகவே கச்சதீவில் இருந்து மணல் அகழ்ந்து எடுத்துவரப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரணில் விக்ரமசிங்க சிறிலங்காவின் அதிபராக பதவியேற்றதையடுத்தே இவ்வாறான செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
தற்போது நெடுந்தீவு பகுதியில் தமிழர் புராதனத்தை பறைசாற்றும் வெடியரசன் கோட்டை, பௌத்த மதத்திற்கு உரியது என அடையாளப்படுத்தும் முயற்சியில் தொல்பொருள் திணைக்களம் முனைப்புடன் செயற்பட்டு வரும் நிலையில், தற்போது கச்சதீவில் இருந்து நெடுந்தீவிற்கு மணல் எடுத்து வருவதும் பெரும் பேசுபொருளுக்குள்ளாகியுள்ளது.
பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள புத்தர் சிலை
இதேவேளை கச்சதீவிலும் பாரிய புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்து கடற்படையினர் வழிபட்டு வருவதும் இலங்கையில் மட்டுமன்றி தென்னிந்தியாவிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில், மீண்டும் மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளையே சிறிலங்கா கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வலியுறுத்தல்
இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தும் சிறிலங்கா தலைவருக்கோ அல்லது பிரதமருக்கு தெரியாமலா இடம்பெறுகின்றது எனவும், அல்லது இதற்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் என்போருக்கும் தெரியாமலா இடம்பெறுகின்றது எனவும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
எனவே சிறிலங்கா அதிபர் இவ்வாறான விடயங்களை மிகுந்த கவனத்தில் எடுத்து, துறைசார் அமைச்சர்களுக்கோ அதிகாரிகளுக்கோ
இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தல் விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

