நான்காண்டு தாமதம் - ஆறுபேர் விடுதலையை வரவேற்று கமல் ‘டுவிட்’
நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவுனர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் பேரறிவாளன். இந்த வழக்கில் கடந்த மே.18 ஆம் திகதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
இதே சட்டப்பிரிவின் கீழ், தங்களையும் விடுதலை செய்யவேண்டும் என நளினி உள்ளிட்ட 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதுகுறித்து தமிழக மற்றும் மத்திய அரசு பதில் அளிக்குமாறு கடந்த மாதம் 26 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் வழக்கு 11 ஆம் திகதி (இன்று) ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை , ஆறு பேரின் நன்னடத்தை , சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறையை மீறாதது, ஆளுநரின் தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் டுவீட் செய்துள்ளார். அதில், "தமிழக அமைச்சரவை 2018-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டிருந்தால் அறுவர் விடுதலையில் நான்காண்டு தாமதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.
குறுக்கீடு செய்யும் ஆளுநர்கள்
மாநில அரசின் முடிவுகளில் குறுக்கீடு செய்யும் ஆளுநர்களுக்கு உச்சநீதின்றத்தின் தீர்ப்பு ஒரு படிப்பினை. நியமனப் பதவியில் இருப்போர் மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும்." என தெரிவிததுள்ளார்.
