குடும்பத்தலைவியாக வாழப்போகின்றேன் - விடுதலையான நளினியின் நெகிழ்ச்சியான அறிவிப்பு
நான் இனிமேல் குடும்பத் தலைவியாகவே இருக்கப் போகிறேன். இனிமேல் எனது குடும்பம், எனது கணவர், எனது குழந்தைக்காகவே வாழப் போகிறேன் என விடுதலையான நளினி தெரிவித்துள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் சிறையில் இருந்து விடுதலையான நளினி செய்தியாளரைச் சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழக மக்களுக்கு நன்றி
பேரறிவாளன் விடுதலைக்கு பிறகு 6 பேரும் விடுதலையாவோம் என நம்பிக்கை இருந்தது, தற்போது விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
எனக்கு உறுதுணையாக இருந்த தமிழக மக்களுக்கு நன்றி.. இத்தனை காலமாக எங்களுக்கு உதவிய ஒவ்வொரு நபருக்கும் மனமார்ந்த நன்றிகள். அதேபோல மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. எனது விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
குடும்பத்தலைவியாக வாழப்போகின்றேன்
நான் இனிமேல் குடும்பத் தலைவியாகவே இருக்கப் போகிறேன். இனிமேல் எனது குடும்பம், எனது கணவர், எனது குழந்தைக்காகவே வாழப் போகிறேன். இவர்களுக்கானது என்னுடைய வாழ்க்கை.
சென்னையில் நாளை நான் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளேன். என்னுடன் உச்ச நீதிமன்றத்தில் எனக்காக ஆஜரான வழக்கறிஞரும் செய்தியாளர்களைச் சந்திப்பார். அப்போது கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்"
இனிமேல் என்ன சந்தோஷம்? 6 பேரும் அவரவர் குடும்பத்துடன் சேரவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
என் மகள் ஹரித்ராவுடன் வாழ விரும்புகிறேன், என் மகள் சொல்வதை வைத்து இனி என்ன செய்ய வேண்டும் என்று நடவடிக்கைகளை எடுப்பேன் என கூறியுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நளினியின் சகோதரர் பாக்கியநாதன், "நளினியும் சரி எங்கள் குடும்பத்தினரும் சரி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். அவர் இனிமேல் குடும்பத்துடன் சாதாரண ஒரு வாழ்க்கை வாழப் போகிறார். முதல்வரிடம் நேரில் நன்றி தெரிவிக்க அவரிடம் நேரம் கேட்க முயன்று வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
நேரில் பேசக் கூட முடியவில்லை
நளினியும் அவரது கணவர் முருகனும் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்களால் இரண்டு வார்த்தை கூட நேரில் பேசிக் கொள்ள முடியவில்லை. முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களைத் திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நளினியின் மகள் ஹரித்ரா தற்போது லண்டனில் மருத்துவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.