முட்படுக்கையின் மேல் ஊடகப் பயணம் ; மனம் திறந்தார் கந்தையா பாஸ்கரன்!
"26 ஆண்டுகள் ஒரு ஊடகம் வெற்றிப்பாதையில் பயணிப்பது என்பது சாதாரண விடயமல்ல.
உலகத்தமிழர் பரப்பிலே பரந்துவிரிந்த ஒரு ஊடகமாக, தனித்துவமான அடையாளத்தோடு ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பு இயங்கிக்கொண்டிருக்கிறது.
உலகளாவிய ரீதியில் தமிழர்களின் அடையாளத்தை பிரதிபலிக்கும் நிறுவனங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.
அந்தவகையில், தமிழர்களுக்கு என்று ஒரு அடையாளமாக, ஒட்டுமொத்த தமிழர்களும் பெருமைப்படக்கூடிய வகையில் ஐ.பி.சி தமிழ் ஊடகம் மற்றும் அதனோடு இணைந்த லங்கா சிறி ஊடகம் இருப்பதை எண்ணி நான் பெருமைப்படுகின்றேன்."
இவ்வாறு, இன்றையதினம் ஐ.பி.சி தமிழ் யாழ் கலையகத்தில் இடம்பெற்ற ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் 26 ஆவது ஆண்டுநிறைவு கொண்டாட்டத்தில் ஐ.பி.சி தமிழ் ஊடக குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஊடக நோக்கம்
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"ஐ.பி.சி தமிழ் ஊடகம் 26 ஆண்டுகளாய் வெற்றிப்பாதையில் பயணிப்பதற்கு நேயர்களாகிய உலகளாவிய தமிழ் உறவுகளுக்கே அந்த பெருமை சென்றடைய வேண்டும்.
ஐ.பி.சி தமிழ் ஊடகமானது தலைமுறைகள் தாண்டி பயணிக்கவேண்டும், எம் இனத்தினுடைய விடுதலையை நோக்கி பயணிக்க வேண்டும்.
எமது தேசத்தில் உள்ள எம் இனத்தின் வலிகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய ஊடகமாக மிளிர வேண்டும்.
சமூகத்திலே நல்ல சிந்தனைகளை விதைத்து, பாதைகள் மாறி பயணிக்கும் எமது சமூகத்தை நேர்வழிப்படுத்தக்கூடிய ஒரு சமூகப்பாங்கான ஊடகமாக திகழவேண்டும்.
இவற்றுக்கான மூல காரணமாக எமது ஐ.பி.சி தமிழ் ஊடகம் இருக்க வேண்டும்.
வெளியில் இருந்து ஆயிரம் விமர்சனங்கள் வரலாம், விமர்சிப்பது என்பது மனித இயல்பு, ஆகவே எல்லோரையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையில் எந்த காரியத்தையும் செய்ய முடியாது.
விமர்சனங்களை புறம்தள்ளி "எடுத்த காரியம் யாவிலும் வெற்றி" எனும் இலக்கோடு உன்னத விடுதலை நோக்கத்திற்கான பயணமாக, தமிழுக்கான முக்கியத்துவத்தை வழங்கி, தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய ஒரு தளமாக ஐ.பி.சி தமிழ் ஊடகம் பயணிக்க வேண்டும்." இவ்வாறு ஐ.பி.சி தமிழ் ஊடக குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் அவர்களின் வாழ்த்துச் செய்தி அமைந்துள்ளது.
