விமான பயண திருப்பம்! தவறுதலாக சவூதிக்கு சென்ற இளைஞனால் அதிர்ச்சி
பாகிஸ்தானின் - லாகூரிலிருந்து கராச்சி செல்ல உள்ளூர் விமானம் எடுக்க நினைத்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தவறுதலாக சவூதி அரேபியா செல்லும் விமானத்தில் ஏறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷாஸேன் என்ற இளைஞர், பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கராச்சிக்கு பயணம் செய்ய உள்ளூர் விமானத்தை முன்பதிவு செய்திருந்தார்.
விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் அருகருகே நின்றிருந்த நிலையில், தவறுதலாக சவூதி அரேபியா செல்லும் சர்வதேச விமானத்தில் ஏறியுள்ளார்.
பயணத்தால் ஏற்பட்ட செலவுகள்
விமானம் புறப்பட்ட பிறகு, பயணம் நீடித்ததைக் கவனித்த அவர், அருகிலிருந்த பயணிகளிடம் பயண தூரம் குறித்து கேட்டபோது தான், இது சவூதிக்கு செல்கின்ற விமானம் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட விமான ஊழியர்களும், பற்றுச்சீட்டு பரிசோதனைக் குழுவினரும் தனது தவறை கவனிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தவறான பயணத்தால் ஏற்பட்ட செலவுகள் மற்றும் மன உளைச்சலுக்காக, சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துக்கு ஷாஸேன் இழப்பீடு கோரி சட்டப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளார்.
விசாரணை
அதில், தன்னிடம் கடவுச்சீட்டு இல்லாத நிலையில் சர்வதேச விமானத்தில் ஏற அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பாக விமான நிலைய ஊழியர்கள் அலட்சியமாக நடந்துகொண்டதாக கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புலனாய்வு முகமை (FIA) விசாரணை நடத்தி வருவதாக பாகிஸ்தானின் முன்னணி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

