போர் மௌனிப்பின் பின்னர் சுரண்டப்படும் வளங்கள் - போராட்டத்திற்கு அழைப்பு!
கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் டிசம்பர் 16ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் போராட்டம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நிறைவடையவுள்ளது. போராட்ட நிறைவில் வடமாகாண ஆளுநர் செயலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளது.
போராட்டத்திற்கு அழைப்பு
இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போராட்டத்திற்கான அழைப்பை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள், விடுத்தனர். கிராஞ்சி பகுதி மீனவர்களின் போராட்டத்தை உரிய தரப்பினர் கண்டுகொள்வதாக இல்லை.
மக்களின் விருப்புக்கு மாறாக கடலட்டை பண்ணைகளை அமைக்க முடியாது. கடலட்டை பண்ணையை முன்னுரிமைப்படுத்தி அரசாங்கம் செயற்படுகிறது. இதில் பல்தேசிய கம்பனிகளே நன்மை பெறுகின்றன என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆ.சதீஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாணத்திலுள்ள அனைத்து சிவில் சமூகத்தினரும் அரசியல் தரப்புகளும் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவளித்து பங்கேற்க வேண்டுமென இ.முரளிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால் சிறிய மீனவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் பாரிய நெருக்கடி நிலை ஏற்படுமென தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிக் குரூஸ் தெரிவித்தார்.
சுரண்டப்படும் வளங்கள்
அரசாங்கம் தனது இலாபங்களுக்காக கடலட்டை பண்ணையை உருவாக்குகிறது. இதற்காக கடலட்டை பண்ணைக்கு ஆதரவான கருத்தை நக்டா வெளியிடுகிறது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் எமது பகுதி வளங்கள் சுரண்டப்படுகிறன. எங்கள் வளங்களை சுரண்டிவிட்டு அரசியல் தீர்வு தந்து பயனில்லை என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இன்பம் கருத்து தெரிவித்தார்.
கிராஞ்சி இலவன்குடாவில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 76 நாட்கள் போராட்டம் இடம்பெற்று வருவதாகவும் அரசியல் தரப்புக்கள் கண்டுகொள்வதில்லை எனவும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
