கிளிநொச்சி மக்களை வாட்டும் வெள்ளம்! நலன்புரி நிலையங்களில் மக்கள் தஞ்சம்
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டம் பாரியளவில் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, இரணைமடுக் குளத்தின் தாழ்பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களான கண்டாவளை, தர்மபுரம் , பிரமந்தனாறு, முரசுமோட்டை ,புன்னைநீராவி, பெரியகுளம், குமரபுரம், ஊரியான், உமையாள்புரம், பரந்தன், புளியம்பொக்கணை ஆகிய இடங்களில் பாரியளவில் வெள்ளநீர் வீடுகளிற்குள் புகுந்ததால் மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
04 நலன்புரி நிலையங்களில் நாகேந்திரபுரம் மகாவித்தியாலயம்,முரசுமோட்டை அ.த.க பாடசாலை,கண்டாவளை மகாவித்தியாலயம் ஆகிய இடங்களை இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கியிருந்தார்.
கள விஜயம்
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், கரைச்சி மற்றும் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இடங்களில் 1,364 குடும்பங்களைச் சேர்ந்த 4,305 பேர் பாதிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவில் 86 குடும்பங்களை சேர்ந்த 263 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 707 குடும்பங்களை சேர்ந்த 2,214 பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் குழுவினர் இன்று (17) வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள கால்நடைப் பண்ணையில் மழை காரணமாக ஏற்பட்ட அழிவுகள் தொடர்பாக கள விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.