லண்டனில் ரணில் உருவாக்கும் தமிழர் பொறி
இலங்கையின் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு வடக்கு - கிழக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தான் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளதான செய்தி மற்றும் சிங்கள மக்களுக்குரிய வெசாக் செய்தியை விடுத்த கையுடன், சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று(4) பிரித்தானியாவுக்கு பயணப்பட்டுள்ளார்.
ரணில் தனது பிரித்தானிய பயணத்தை மையப்படுத்தி இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான செய்திகளை தனது மே தின உரையில் தொட்டுச் சென்றுள்ள நிலையில், இன்று இது தொடர்பான புதிய செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
ரணிலின் தந்திரோபாயம்
நாளை மறுதினம் லண்டனில் இடம்பெறவுள்ள மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காகவும், நாளை ஐந்தாம் திகதி மன்னர் சார்ள்ஸ் தலைமையில் நடத்தப்படும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையிலும் ரணிலின் லண்டன் பயணம் இடம்பெறுகிறது.
இந்தப் பின்னணியில் தான், இலங்கையின் இனப் பிரச்சினையை தீர்க்க தான் நகர்வுகளை எடுப்பதாகவும் அதற்காக தனது லண்டன் பயணம் முடிந்தவுடன், தமிழர் தரப்பை சந்திக்கவுள்ளதான கதையாடல்களை இலங்கைத் தீவின் முன்னாள் குடியேற்ற எஜமானனும், தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு குறித்த கரிசனைகளை வெளியிடும் பிரித்தானியாவிடம் அவர் இந்த தந்திரோபாயத்தை பிரயோகிப்பதாக தெரிகிறது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தை
அடுத்த வாரம் 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு மாலை நேரங்களில் இடம்பெறும் இந்த அமரர்களில் முதலாம் நாள் பொது பிரச்சினை எனவும், இரண்டாம் நாள் அதிகார பகிர்வு எனவும், மூன்றாம் நாள் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசுவதற்கான நிகழ்ச்சி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த அமர்வுகளில் பங்கெடுக்குமாறு கோரப்படும் அழைப்புகள் இன்று அல்லது நாளை வடக்கு - கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும் எனவும் தெரிகின்றது.
இந்த செய்தியை முன்னகர்த்தியபடி, லண்டனில் சில சந்திப்புகளை நடத்தி ஆதாயங்களைப் பெற ரணில் விக்ரமசிங்க முனைவது தெரிகிறது.
1953 ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழா இடம்பெற்ற போது, அப்போதைய சிறிலங்காவின் பிரதமர் டட்லி சேனாநாயக்கவுடன் ரணிலின் பெற்றோர் கலந்துகொண்ட நிலையில், இப்போது 70 ஆண்டுகளுக்கு பின்னர் பிரித்தானியாவில் இடம்பெறும் முடிசூட்டு விழா ஒன்றில் ரணில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.
அனைத்துல அரங்கில் ரணில் விக்ரமசிங்க சில சாதகங்களைப் பெறத் துடிக்க, உள்ளூரில் யாழ்ப்பாணம், வலி. வடக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை மையப்படுத்திய நகர்வுகள் சிறிலங்காவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
