குருந்தூர்மலை பொங்கல் நிகழ்வை தடைசெய்ய நீதிமன்றம் மறுப்பு - நிபந்தனைகளை விதித்த தொல்பொருள் திணைக்களம்
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் நாளை(18) இடம்பெறும் பொங்கல் விழாவிற்கு தடைவிதிக்க வேண்டும் என சிறிலங்கா காவல்துறையினர் முன்வைத்த விண்ணப்பத்தை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்தப் பொங்கல் வழிப்பாட்டை தடுக்க கல்கமுவ சாந்த போதி தேரருக்கோ அல்லது அருண் சித்தார்த்துகோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை எனவும் முல்லைத்தீவு நீதிமன்று கட்டளையாக்கியுள்ளது.
கலவரம் ஏற்படும் அபாயம்
குருந்தூர் மலையில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் இடம்பெற்றால் இரண்டு குழுவினருக்கிடையில் ஏற்படக் கூடிய கருத்து முரண்பாடு உணர்ச்சிகரமான விடயங்கள் என்பதால் அது மதக்கலவரமாக உருவாகி உயிர் ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என முல்லைத்தீவு காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குருந்தூர்மலையின் அமைவிடத்தின் அடிப்படையில் அவ்வாறான ஒரு கலவரம் ஏற்படுமாயின், அதனை தடுப்பதற்கு மிகவும் கடினமாகும் எனத் தெரிவித்து குற்றவியல் நடைமுறை கோவை பிரிவு 106 (01)கீழ் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ள முல்லைத்தீவு காவல்துறையினர், பொங்கல் வழிபாட்டுக்கு எதிராக தடை உத்தரவை கோரியுள்ளனர்.
இந்த வழக்கு இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என தீர்ப்பளித்துள்ளார்.
தடையுத்தரவு கோரிக்கை நிராகரிப்பு
ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மத வழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது என கட்டளையிட்டு, காவல்துறையினரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அத்துடன் பொங்கல் வழிபாட்டை விகாராதிபதி சாந்தபோதி தேரரோ அல்லது அவருடன் வரும் குழுவினரோ அருண் சித்தார்த் என்பவரோ அல்லது அவருடன் வரும் குழுவினரோ தடுக்க எந்தவிதமான அதிகாரமும் இல்லை எனவும் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.
பொங்கல் பொங்குவது எப்படி
இதேவேளை, குருந்தூர் மலை தொல்பொருள் பாதுகாப்பு காப்பகமாக காணப்படுவதனால் நாளைய தினம் எவ்வாறு பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான நிபந்தனைகளை தொல்பொருள் திணைக்களம் விதித்துள்ளது.
குருந்தூர் மலையின் நிலம் மற்றும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திறந்த வெளியில் தொல்பொருள் அல்லாத கல் மீது இரும்புத் தகடு வைத்து அதன மீது தொல்பொருள் அல்லாத கற்களை பயன்படுத்தி அடுப்பினை தயார் செய்யுமாறு அந்த திணைக்களம் கூறியுள்ளது.
தீ மூட்டும் போது வன பாதுகாப்பு துறையின் சட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நினைவுச் சின்னங்களிலிருந்து விலகி ஸ்ரீலங்கா தொல்லியல் துறை அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்படும் இடத்தில் பொங்கல் வழிபாட்டிற்கு பயன்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அகழ்வு செய்யப்பட்ட எல்லைகளில் உள்ள தொல்பொருள் சின்னங்கள் அபாயகரமான நிலையிலுள்ளமையினால் அதன் எல்லை அரண்களில் நடக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
அகழ்வாராட்சி செய்யப்பட்ட நினைவு சின்னங்கள் மீது உணவு, பழங்கள், திரவப் பொருட்கள், தேங்காய் போன்றவற்றை வைக்க வேண்டாம் எனவும் தேங்காய் உடைத்தல், பால் ஊற்றுதல் போன்ற திரவப் பொருட்களை தெளிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் நடவடிக்கையினால் தொல்பொருளியல் இடம், நிலத்திற்கு கீழ் உள்ள தொல்பொருட்கள் மற்றும் கட்டமைப்புக்களுக்கு சேதம் ஏற்படுத்த கூடாது, பொங்கல் வழிபாட்டினால் அங்கு வழிபட வரும் ஏனைய தரப்பினருக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என தொல்பொருள் திணைக்களம் நிபந்தனை விதித்துள்ளது.