குருந்தூர்மலை விவகாரம் - நீதிபதி மீது குற்றம் சாட்டும் சரத் வீரசேகர
குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியதன் மூலம் தொல்லியல் திணைக்களத்தின் சட்டங்களை அவர் மீறியுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.
அதேநேரம் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
பௌத்தர்களின் மனம் நோக செயற்படுவதும் அவர்களை ஆத்திரமூட்டுவதும் தண்டிக்கத்தக்க விடயமென தொல்லியல் திணைக்களத்தின் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் உரையாற்றிய அவர்,
“முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டை அவரது மனைவியே முன்வைத்துள்ளார்.
தமது வீட்டில் திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றதாக முல்லைத்தீவு நீதவான் நீதிபதி காவல்துறையில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, தனது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது மனைவி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் இதற்கான சிகிச்சைகளை பெற்று வருவதாகவும் மனைவி கூறியுள்ளார்.
இந்த நிலையில், அவர் உண்மையிலேயே ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்றால், அவரின் மருத்துவ சிகிச்சைகளுக்கு சிங்களவர்களான நாம் உதவுவோம்.
இவ்வாறான ஒருவருக்கு நீதிமன்ற உத்தரவை பிறப்பிக்க முடியுமா? சரியான தீர்மானத்தை மேற்கொள்ள முடியாத ஒருவரின் தீர்ப்பை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்.
இந்த நிலையில், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாற்றப்பட வேண்டும். இந்த கோரிக்கையை நாம் சிறிலங்கா அரசாங்கத்திடம் முன்வைக்கிறோம்.
சிறந்த கொள்கைகள் மற்றும் நல்லொழுக்கமுடைய, இனவாதமற்ற தமிழ் நபரொருவர் நீதவானாக நியமிக்கப்பட வேண்டும்” - என்றார்.