உயிரிழந்த இராணுவ வீரர்களின் பெயரில் சிறிலங்கா இராணுவ அதிகாரியின் மோசடி
உயிரிழந்த இராணுவ வீரர்களின் பெயரில் மோசடி
உயிரிழந்த இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை பொருட்களை வழங்குவதாக தெரிவித்து இராணுவ சீருடையில் மேலும் மூவருடன் உதவிப் பணத்தை பெற்றுக் கொண்டிருந்த லான்ஸ் கோப்ரல் ஒருவர் தெஹிவளை மல்வத்தை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெஹிவளை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரான லான்ஸ் கோப்ரல் உடன் கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
ஆயுதப்படைபிரிவின் தலைமையகத்தில் கடமை
கைது செய்யப்பட்ட லான்ஸ் கோப்ரல் கடந்த 31ஆம் திகதி வரை இலங்கை ஆயுதப்படைபிரிவின் தலைமையகத்தில் அமைந்துள்ள ராக் ஹவுஸ் முகாமில் ஆலோசகராக இருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது, 1050 ரூபா பணம் வசூலிக்கப்பட்டதுடன், பணம் பதிவு செய்யப்பட்ட புத்தகமும் கைப்பற்றப்பட்டது.
கிடைத்த இரகசிய தகவல்
உயிரிழந்த இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு புத்தகங்கள் மற்றும் சிறிய பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்காக இராணுவ ஆடை அணிந்த ஒருவர் மூன்று பேருடன் இணைந்து நிதியுதவிகளை சேகரிப்பதாக தெஹிவளை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல் பரிசோதகர் டபிள்யூ. ஏ.டி.சரச்சந்திரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கடந்த சில நாட்களாக தெஹிவளை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் உள்ள வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களுக்குச் சென்று சுமார் 20,000 ரூபா பண உதவியை பெற்றுச் சென்றுள்ளனர். அத்துடன் சந்தேகம் ஏதும் ஏற்படாத வகையில் உதவித்தொகையை புத்தகத்தில் பதிவு செய்து உத்தியோகபூர்வ முத்திரை பதித்துள்ளனர்.

