தமிழர் பகுதியில் அடாத்தாக குடியேறும் புத்தர்: கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழ் முஸ்லிம் காணிகள்
திருகோணமலை மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இடம்பெற்று வருவதாகவும் திருகோணமலையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் எஸ்.குகதாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை திருஞானசம்பர் வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பண்ணையாளர்கள்
இது தொடர்பில் மேலும், உரையாற்றுகையில்,
திருகோணமலை மாவட்டத்தில் 31 விகாரைகள் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்ற நிலையில் 23 விகாரைகளின் கட்டுமான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அனைத்து இடங்களும் தமிழர்களுக்கு சொந்தமான நிலத்திலேயே நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, வனப்பாதுகாப்பு திணைக்களம் 43435 ஏக்கரை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. தொல்பொருள் திணைக்களம் 2605 ஏக்கர் காணியை ஆக்கிரமித்துள்ளது புல்மோட்டை அரசி மலை பௌத்தப்பிக்கு கிழக்கு செயலணி என்ற பெயரில் 2908 ஏக்கர் காணியை ஆக்கிரமித்துள்ளனர்.

இதேநேரம் வனவிலங்கு திணைக்களம் அண்ணளவாக முப்பது ஆயிரம் ஏக்கர் காணியை தங்களுக்கு சொந்தமான காணியென தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் 28 ஆயிரம் கால்நடைகள் மேய்ச்சல் தரை இன்றி பண்ணையாளர்கள் அவதியுற்று வருவதாகவும் இதன்போது தெளிவூட்டினார்.
தமிழ் முஸ்லிம் மக்களுடைய காணிகள்
இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்களுடைய காணிகளையே கையகப்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
 
  
நில ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் கொந்தளித்து வருவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட கிளை பொருளாளர் வெள்ள தம்பி சுரேஷ், கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.








 
                                        
                                                                                                                         
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        