வெளியேறியது சிறிலங்கா இராணுவம் - 33 வருடங்களின் பின் தமிழர்களுக்கு கிடைக்கவுள்ள நிலங்கள் (காணொளி)
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது.
கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக ஜே/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
இனப்பிரச்சினை தீர்வு
மிக விரைவில், அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சிறிலங்கா அதிபருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது.
காணி விடுவிப்பு
இந்தப் பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு தொடர்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள்
பாதுகாப்பு தரப்பினரையும் காவல்துறையினரையும் உள்ளடக்கிய குறித்த குழு விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.
மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சிறிலங்கா வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் அதிகளவானவற்றை விரைவில் விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
