நிலவும் சீரற்ற காலநிலை : விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பதுளை (Badulla) மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல, பதுளை, கந்தகெட்டிய, ஊவ பரணகம, மீகஹகிவுல மற்றும் சொரணாதொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பையும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டள்ளது.
மழை நிலைமை | முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. |
காற்று | நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. |
கடல் நிலை | கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். |
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
